சென்னை: அதிமுக தலைகளுக்கு நெருக்கமான தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி  வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி மற்றும் கடன் தள்ளுபடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த விவகாரம், தற்போது திமுக அரசு அறிவித்துள்ள நகைக்கடன் தொடர்பான ஆய்வின் போது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து,  தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இளங்கோவன் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவராக 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்,சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

ஆர்.இளங்கோவன் வீடு, சேலத்தை அடுத்த புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ளது. அந்த வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இளங்கோவன், 2014 முதல் 2020 வரை ரூ.3.78 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும், பினாமி பெயரில் சொத்து சேர்த்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.