சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் நிறுவனங்கள் என சுமார் 69 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதை கண்டித்து பல பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பதிந்துள்ள வழக்கில்,  வருமானத்திற்கு அதிகமாக சுமார் 5கோடி அளவுக்கு தங்கமணி சொத்து சேர்த்ததாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  இந்த வழக்கில், தங்கமணியின் மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இன்று காலை முதல்  முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய 69 இடங்களில் ரெய்டு நடைபெற்று வரு கிறது. தமிழகத்தின் நாமக்கல், சென்னை, வேலூர், கரூர், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் சோதனை நடக்கிறது. சென்னையில் மட்டும் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலுள்ள தங்கமணியின் அறை, கிழக்கு கடற்கரை சாலை பனையூரிலுள்ள தங்கமணியின் வீடு, பட்டினப்பாக்கத்தில் தங்கமணியின் சம்பந்தி சிவசுப்பிரமணியன் வீடு, அரும்பாக்கத்தில் தங்கமணிக்கு சொந்தமானதாக கூறப்படும் ஸ்ரீ பிளைவுட்ஸ் நிறுவனம், இந்நிறுவனத்தின் பங்குதாரரான ஜனார்த்தனன் என்பவரது கோயம்பேடு வீடு, நுங்கம்பாக்கம் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர், மதுரவாயல், ஷெனாய் நகர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரெய்டு நடைபெறும் இடங்களில் காவல்துறை யினருடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கடுமையாக கண்டித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர்ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தற்சமயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், உற்சாகத்தோடும் பெருந்திரளான தொண்டர்கள் ஆர்வத்தோடும் கலந்து கொண்டு 35 கழக மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி, உளவுத் துறையின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்பைக் காட்டிலும் கூடுதலாக மெருகேற்றிக் கொண்டு, பலமூட்டிக் கொண்டு வீறுகொண்டு எழுகிறது என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியாத, பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு, அரசியல் வன்மத்தையும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும்,

லஞ்ச ஒழிப்புத் துறையை தன்னுடைய ஏவல் துறையாக மாற்றி, அன்புச் சகோதரர் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, எம்.எல்.ஏ அவர்களுடைய இல்லத்திலும், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களிலும் சோதனை என்கின்ற பெயரில் மிகப் பெரிய வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை நாங்கள் அடிப்படையிலேயே வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.