டில்லி

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது தற்போதைய நடவடிக்கைகளால் உத்தரப்பிரதேச அரசியலில் மற்ற தலைவர்களை பின்னுக்குத் தள்ளி உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து கடும் போராட்டம் நடந்து வருகிறது.   இதனால் மாநிலத்தை ஆளும் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இந்தப் போராட்டத்தில் பிஜனோரில் இருவர் மரணம் அடைந்தனர்.  இவர்கள் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ் ஆர் தாராபுரி கைது செய்யப்பட்டார்.  கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட அதிகாரியின் குடும்பத்தினரை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி வதேரா சென்றார்.  அவரை உபி மாநில காவல்துறை தடுத்ததால் அவர் காரில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.  அவரை நடக்க விடாமல் காவல்துறையினர் பிடித்துத் தள்ளி தாக்கினர்.

பிரியங்கா சுமார் 3 கிமீ தூரம் நடந்து சென்ற பிறகு காங்கிரஸ் தலைவர் தீரஜ் குமார் இரு சக்கர வாகனத்திலவரை ஏற்றிச் சென்று தாராபுரியின் வீட்டை அடைந்தார்.  அங்கு அவர் அதிகாரியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். இது உத்தரப்பிரதேச மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  உபி மாநில எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் இதுவரை பாதிக்கப்பட்டோர் யாருடைய குடும்பத்தினரையும் சந்திக்கவும் முயற்சி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரியங்கா காந்தி இந்த சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் தொண்டர்களிடம் வரும் 2022 ஆம் வருடம் நடைபெற உள்ள உ பி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்தார்.  இது சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு மேலும் பின்னடைவை அளித்துள்ளது.   போராட்டங்களில் நேரடியாகப் பங்கு கொள்ளாத இவ்விரு கட்சித் தலைவர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி நேற்று ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவுக்கு ராஞ்சி செல்ல இருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பயணத்தை ரத்து செய்தார்.  அத்துடன் செய்தியாளர்களை அழைத்த அகிலேஷ் தானும் தனது தொண்டர்களும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விண்ணப்பத்தை அளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.  அத்துடன் இந்த போராட்டத்தில் மரணம் அடைந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

நேற்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி,மீரட் நகரில் போராட்டக்காரர்களைப் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் எனத் தெரிவித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். அத்துடன் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான் எனவும் பாகிஸ்தானியர்கள் அல்ல எனவும் தெரிவித்தார்.  மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இது குறித்து அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், “பிரியங்கா காந்தி வதேராவின் மீது நடந்த தாக்குதலால் மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதும் யோகி அரசால் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும் தெளிவாகி உள்ளது.  இந்த அரசு ஏற்கனவே அவர் சோன்பத்ரா பகுதிக்குச் சென்ற போது அவரை தடுத்துள்ளது  அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் பிரியங்காவின் மீதான மதிப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.