டில்லி

நேற்று டில்லியில் மழை பெய்ததால் மாசு மற்றும் புகை மூட்டம் சற்று தணிந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்று மாசு அதிகரித்து  காற்றுடன் அடர்ந்த பனிமூட்டமும் சேர்ந்ததால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். இங்கு வாகன பெருக்கத்தால் ஏற்படும் புகை மாசு மட்டுமின்றி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற டில்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில், அறுவடைக்குப் பின் விவசாய கழிவுகள் எரிக்கப்படும்போது வெளியாகும் புகையும் டில்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே மாசுபட்ட காற்று மற்றும் புகைமூட்டத்தைத் தணிக்கும் வகையில் நகரின் பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.  மாநில அரசு செயற்கை மழை பெய்ய வைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.

நேற்று இரவு டில்லியில் மிதமான மழை பெய்ததால் காற்று மாசு மற்றும் புகை மூட்டம் சற்று தணிந்துள்ளது. இங்கு மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் படிப்படியாகக் காற்றின் தரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வாரங்களுக்குப் பிறகு டில்லி மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். இன்று டில்லியில் காற்றின் தரம் 407 என்ற அளவில் இருந்தது.