டில்லி

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதாவின் கீழ் அனைத்து இந்தியர்களும் இட ஒதுக்கீடு பெறும் நிலை உள்ளது.

 

கடந்த திங்கள் அன்று மத்திய அரசு புதிய இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை அறிவித்தது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து வருகிறது. தலித் மற்றும் பழங்குடியின ஆர்வலர்கள் இந்த சட்ட மசோதாவினால் சமூக நீதி பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்டத்தில் உள்ள அம்சங்களை ஆராயும் போது இட ஒதுக்கிட்டுக்கான விதிமுறைகளின் படி அநேகமாக அனைத்து இந்தியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு இந்தியரும் இந்த விதிமுறையில் ஏதாவது ஒரு விதிமுறையின் கீழ் வர வாய்ப்புள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக காண்போம்

முதலாவதாக ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும் என உள்ளது. வருமான வரி மற்றும் தேசிய ஊழியர் அமைப்புக்களில் உள்ள விவரங்களின் படி 95% இந்திய மக்களின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாகவே உள்ளது. அதாவது ஒரு குடும்பத்தின் மாத வருமானம் கிட்டத்தட்ட ரூ.60,000க்கு சற்றே அதிகமாக இருப்பவர்கள் வரை இந்த ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற முடியும்

இரண்டாவதாக விவசாய நிலம் வைத்திருப்போருக்கு 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் இருக்க வேண்டும். இதன் படி 86%க்கும் அதிகமான விவசாயிகளிடம் 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் மட்டுமே உள்ளது. ஆகவே இவர்களும் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெறலாம்.

மூன்றாவதாக 1000 சதுர அடிக்கும் குறைவாக வீடுகளில் வசிப்போருக்கு இட ஒதுக்கீடு உண்டு. தற்போதுள்ள நிலையில் சுமார் 80%க்கும் மேற்பட்டவர்கள் 500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள பல அடுக்கு மாடி கட்டிடங்களில் 2 படுக்கை அறை கொண்ட வீடுகளின் பரப்பளவு பெரும்பாலும் 1000 சதுர அடிக்கு குறைவாகவே உள்ளன. இவர்களுக்கும் இட ஒதுக்கீடு உண்டு.

இந்த புதிய சட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரும் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற முடியும் என தெரிய வந்துள்ளது.