நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய கொரோனா….

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நீரின் பயன்பாடு குறைவாக இருந்ததால் தற்போது தமிழ்நாட்டில் நிலத்தடிநீர் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 31 மாவட்டங்களில், 27 மாவட்டங்களின் நிலத்தடி நீரிருப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.  கடந்த வருடம் இதே நேரம், 21 மாவட்டங்களில் நீரிருப்பு வெகுவாக குறைந்து, பருவமழைக்குப் பின்னரே குறிப்பிட்ட அளவினை எட்டியது.

பொதுப்பணித்துறை அறிக்கையின்படி, நாகப்பட்டினம், திருச்சி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் மட்டுமே நிலத்தடி நீர்க்குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கினால் அனைத்து  தொழிற்சாலைகளும் மூடப்பட்டதாலும் மற்றும் விவசாயத்திற்கான அதிக அளவிலான நீர்ப்பயன்பாடு குறைந்ததுமே இதற்கு முக்கிய காரணமாகும் என்கிறது இவ்வறிக்கை.

“சரியாக இந்த ஊரடங்கிற்கு முன்னால தான் சட்ட விரோதமாகச் செயல்பட்ட 800-க்கும் மேற்பட்ட தனியார் பேக்கேஜ் குடிநீர் ஆலைகள் சீல் வைத்து மூடப்பட்டன.  இவை அனைத்துமே வெகு ஆழமாக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சி வியாபாரம் செய்து வந்த நிறுவனங்கள்.  ஊரடங்கு வராமல் இருந்திருத்தாலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரினை அளவுக்கதிகமாக உறிஞ்சும் தனியார் நிறுவனங்களை கண்டுபிடிச்சு சீல் வைக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம்” என்கிறார் ஒரு மூத்த அதிகாரி.

கடந்த ஆண்டைவிட நிலத்தடி நீர் அதிகரித்ததில் பெரம்பலூர் (4.49 மீ), திருவண்ணாமலை (3.46 மீ) மற்றும் சிவகங்கை (3.19 மீ) ஆகிய மாவட்டங்கள் முன்னிலை வகிக்கின்றன.

தமிழகம் விவசாயத்திற்கென்று 50%-க்கும் அதிகமாக இந்த நிலத்தடி நீரினையே நம்பி இருக்கும் சூழலில் இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

– லெட்சுமி பிரியா