மேட்டூர்:

8 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட நாளில் (ஜூன் 12ந்தேதி) மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்காக  தண்ணீர் திறந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆண்டுதோறும் ஜூன் 12ந்தேதி அன்று குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால், தண்ணீர் திறக்கப்படும் நாள் தாமதமானது. இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வழக்கமான நாளான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையின் 8 கண் மதகு பகுதியில் குறுவை சாகுபடிக்கு நீர்  திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையின் வலது கரைப் பகுதியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, ஷட்டரை இயக்கி பாசனத்துக்கு  தண்ணீரை திறந்து விட்டார். அதைத்தொடர்ந்து அணையில் இருந்து வெளியான தண்ணீரில் மலர்தூவினார்.

இதன்மூலம்  சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

முதலில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதாகவும்,  தொடர்ந்து படிப்படியாக 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் கே ஏ செங்கோட்டையன் பி தங்கமணி கே சி கருப்பண்ணன் வி சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 11 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நாளான ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு நடப்பு ஆண்டில் தண்ணீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2011 இல் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதன் முதலாக 1934 ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.