சென்னை: போதைப்பொருட்கள் கடத்தல், டெலிவரி மற்றும் வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் பிரபல கொரியர் நிறுவனமான புரபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று 2வது நாளாக  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

1989 ஆம் ஆண்டு ப்ரொபஷனல் கொரியர் என்கிற பெயரில் தொடங்கப்பட்ட தனியார் கொரியர் நிறுவனம், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும், 2007ஆம் ஆண்டு முதல் துபாய்,சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் என மொத்தம் சுமார் 3300 கிளைகளுடன் இயங்கி  வருகிறது.

நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம் கத்தீட்ரல் கார்டன் பகுதியிலும், பதிவு அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த அகமது மீரான், சேக் மொய்தீன் என்பவர் இந்த நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குனராகவும், இவருடன் மேலும் 5 பேர் இயக்குனர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இங்கு நேற்று  காலை 10 மணி  அளவில் வருகை தந்த வருமான வரித்துறையினர்,  அதிடியாக சோதனையில் இறங்கினர்.   சென்னையில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை,கிண்டி, மண்ணடி, கோயம்பேடு உள்ளிட்ட ஆறு இடங்களிலும் தமிழகம் முழுவதும் 40 இடங்களிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை இன்று 2வது நாளாக தொடர்கிறது.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் கொரியர் மூலம் தகவல் தொடர்பு மற்றும் பொருட்கள் பரிமாற்றம் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. இவ்வாறு வியாபாரம் அதிகரித்த நிலையில் முறையான கணக்கு காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்ததாகவும், அதன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக நிறுவனத்தின் நேரடி விற்பனையை தவிர்த்து பிரான்சைஸ் என்று சொல்லக்கூடிய ஏஜென்டுகள் மூலமாக அதிக அளவில் கொரியர் அலுவலங்கள் அமைத்து கொரியர் சேவை வழங்கியுள்ளதும், அவ்வாறு பிரான்சைஸ் அடிப்படையில் ஈட்டப்பட்ட வருமானத்திற்கு முறையாக கணக்கு காட்டப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு நிகழ்ந்துள்ளதாக தகவல் வழியாக உள்ளது.

மேலும் சட்டவிரோதமாக கொரியர்கள் மூலம் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தமிழக போலீசார் அண்மையில் கண்டுபிடித்தனர். அது தொடர்பாக அனைத்து கொரியர்  நிறுவனங்களையும் அழைத்து ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது, அதன் அடிப்படையில் இது போன்ற சட்ட விரோத செயல்களிலும் கொரியர் நிறுவனம் ஈடுபட்டு பணம் ஈட்டி இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதேபோல ஹவாலா பண பரிமாற்றம் கொரியர் மூலம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் இறுதியிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம் நகை குறித்து தகவல் வெளியாகும் என தெரியவந்துள்ளது.