திருச்சி:

மிழகத்தில் 32 மாவட்டங்கள் உள்ள நிலையில், 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கி வந்த ஏரிகள் வறண்டு விட்ட நிலையில், விவசாய நிலங்களில் இருந்தும், கடல்நீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்தும் தண்ணீர் சப்ளை லாரிகள் மூலம்  செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் தண்ணீர் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஸ்வரன் தமிழகத்தில்  17 மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக ஒப்புக்கொண்டார். மேலும், தற்போதைய நிலையில், தமிழகத்தில்  49,144 கிராமங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் மொத்த 32 மாவட்டங்கள் உள்ள நிலையில், 17 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக தமிழகஅரசே ஒப்புக்கொண்டுள்ளது, தண்ணீர் பற்றாக்குறையின் அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.