கட்டுரையாளர் பர்கா தத் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், மோடியின் தற்போதைய பல நடவடிக்கைகள், கடந்த 1970களில் மேற்கொள்ளப்பட்ட இந்திரா காந்தியின் நடவடிக்கைகளை ஒத்திருப்பதாக ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

அவர் கூறியுள்ள விஷயங்களில் சில முக்கிய அம்சங்கள்; மோடி கடந்த 2016ம் ஆண்டு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பென்பது மிக மிகப் பெரியது. கடந்த 1975ம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலைக்கு சமமானது.

ஏனெனில், இந்தியாவில் புழக்கத்திலிருந்த 86% பணத்தை திடீரென செல்லாது என்று அறிவிப்பதென்பது சாதாரண சர்வாதிகாரமல்ல. இதை, கடந்த 1969ம் ஆண்டு இந்திரா காந்தி திடீரென வங்கிகளை தேசியமயமாக்கிய நிகழ்வோடு ஒப்பிடலாம்.

இந்திய வணிகப் பரிவர்த்தனையில் கிட்டத்தட்ட 90% பணத்தின் மூலமாகவே நடைபெறுபவை. அப்படியிருக்கையில், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதெல்லாம் ஒரு உச்சபட்ச சர்வாதிகாரத்தனமே. இந்த அறிவிப்பை செய்யும்போது, அரசின் சார்பில் எந்தவித ஒரு சிறு முன்னேற்பாடும் செய்யப்படவில்லை.

மக்கள் வங்கிகளின் வாசல்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தது, தின சம்பளத்திற்கு வேலை பார்ப்போர் தெருவில் அலைந்தது, ஏராளமான சிறுகுறு தொழில்கள் சுத்தமாக முடங்கிப் போனது என்று இந்தியப் பொருளாதாரம் சந்தித்த பேரழிவு கொஞ்ச நஞ்சமல்ல.

நரேந்திர மோடி இன்று செய்ய முயற்சிக்கும் மத்திய அதிகார குவிப்பு என்பது, கடந்த 1970களில் இந்திரா காந்தி மேற்கொண்ட பல செயல்பாடுகளை ஒத்திருக்கிறது. ஆனால், இந்திராவின் நெருக்கடி நிலையால், குறைந்தபட்சம் ரயில் சரியான நேரத்திற்கு வருவது, அலுவலகம் சரியான நேரத்திற்கு இயங்குவது மற்றும் வணிகப் பொருட்களின் அளவும் எடையும் சரியாக இருப்பது போன்ற குறைந்தபட்ச நன்மைகளேனும் இருந்தன. ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்?

அன்று இந்திரா சொன்னார் – “எனது அரசியல் எதிரிகள் இந்திராவை அகற்றுங்கள் என்கிறார்கள்… நான் சொல்கிறேன் வறுமையை அகற்றுகிறேன் என்று”.

இன்று மோடி சொன்னார் – “எனது அரசியல் எதிரிகள் மோடியை அகற்றுங்கள் என்கிறார்கள்… ஆனால் நான் சொல்கிறேன் ஊழலை அகற்றுகிறேன் என்று”.

இவ்வாறாக, பல்வேறான அம்சங்களை ஒப்பிட்டுள்ளார் கட்டுரையாளர்.