இது ஒரு அரேபியக் கதை…

உலகத் தலைவர்களில் சிலர் கவிஞர்களாக அறியப்பட்டுள்ளார்கள். அவர்களில், சிலரே அதை பொதுவெளியில் வெளியிடுவார்கள். ஆனால், அவர்களிலும் சிலர்தான், தங்கள் கவிதையை தனிப்பட்ட வலைப்பக்கத்திலும் வெளியிடுவார்கள்.

துபாயின் ஆட்சியாளரான ஷெய்க் முகமது பின் ரஷீத் அல்-மக்தொம் அந்த அரிதினும் அரிதான ஆட்சியாளர்களுள் ஒருவர். இவர் தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்தப் பிரிவு கவிதையின் சில வரிகளை நாமும் படிப்போம்…

ஓ, அன்பு இதயமே!
இனிமேல் சொல்வதற்கு எதுவுமில்லை…
உனது கொடிய மவுனம் என்னைக் காயப்படுத்திவிட்டது…
என் வாழ்வில் இனி நீ இருக்கப்போவதில்லை…
இனி நீ இருந்தாலும் இறந்தாலும் எனை பாதிக்கப்போவதுமில்லை..!

இந்தக் கவிதையை, பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தாலும், 69 வயதான தன்னை விட்டுப் பிரிந்துபோன தனது 45 வயது மனைவி ஹயா என்பவருக்காகவே இதை எழுதியுள்ளார் துபாய் ஆட்சியாளர்.

சில மாதங்களுக்கு முன்னர், தனது 11 மற்றும் 9 வயது குழந்தைகளோடு, துபாயை விட்டு வெளியேறி பிரிட்டனுக்கு சென்றுவிட்டார் ஹயா. அவர், ஷெய்க் முகமதுவிடமிருந்து விவாகரத்துக் கோரியுள்ளார்.

இளவரசி ஹயா, ஷெய்க் முகமதுவின் 6 மனைவிகளுள் ஒருவர். இவர் கவர்ச்சியானவராகவும் இளமையானவராகவும் அறியப்படுபவர். துபாயை விட்டு வெளியேறி பிரிட்டனுக்கு சென்றுவிட்டதன் மூலம், ஷெய்க் முகமது அரண்மனையிலிருந்து வெளியேறிய மூன்றாவது பெண்மணி என்ற பெயரைப் பெறுகிறார். ஹயா, பிரிட்டனில் அரசியல் அடைக்கலம் கோரி வருகிறார்.

ஷெய்க் முகமதுவின் இரண்டு மகள்களான ஷெய்க்கா ஷம்ஸா அல்-மக்தொம் மற்றும் ஷெய்க்கா லதீஃபா பின்ட் முகமது அல்-மக்தொம் ஆகிய இருவரும் துபாயைவிட்டு தப்ப முயன்று, அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, தற்போது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக துபாயிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தப்பிச்செல்ல உதவியதாக இளவரசி ஹயாவின் மீது குற்றச்சாட்டு உண்டு. மேலும், தனது நண்பரான முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சனை துபாய்க்கு வரவழைத்து ஷெய்க் லதீஃபாவின் நலமறியச் செய்ததும் பிரச்சினையைக் கிளப்பியது.

சமீபகாலமாக, லண்டனில் தங்கியிருக்கும் ஹயாவை பொதுவெளியில் எங்கும் காண முடிவதில்லை. இதுதொடர்பாக துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகளிடமிருந்து எந்த பதிலையும் பெற முடியவில்லை.

யார் இந்த இளவரசி ஹயா என்கிறீர்களா? வேறு யாருமல்ல, புகழ்பெற்ற மறைந்த ஜோர்டான் மன்னர் ஹுசேனின் மகள்தான் இவர். தற்போதைய ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரி.

பிரிட்டனில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றார். குதிரை ஏற்றத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். 2000ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் ஜோர்டான் சார்பாக கலந்துகொண்டார். கடந்த 2004ம் ஆண்டு, ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்த ஒரு எளிய விழாவில், தன்னைவிட 24 வயது மூத்தவரான ஷெய்க் முகமதுவுடன் திருமணம் நடந்தது.

அமீரக நாட்டின் பெண்கள் பத்திரிகை ஒன்று, இவர்கள் இருவரையும் மிகச்சிறந்த ஜோடி என்று புகழ்ந்து கட்டுரை வெளியிட்டிருந்தது (அப்பத்திரிகை எதற்காக அப்படி வெளியிட்டது என்பது படிப்பவர்களுக்குப் புரியும்).

துபாயிலிருந்து அகன்று லண்டனில் தனது 2 குழந்தைகளுடன் குடியேறிய ஹயா, கென்சிங்டன் அரண்மனைக்கு அருகிலுள்ள ஒரு மேன்ஷனில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பிரிட்டன் செல்வதற்கு முன்னதாக, முதலில் ஜெர்மனியில்தான் அடைக்கலம் கோரியிருந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

அதேசமயம், இவர் இளவரசியாக இருந்தாலும், முஸ்லீம் சட்டப்படி, ஒரு பெண் என்பதால் விவாகரத்து கிடைப்பது கடினம் என்றே தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், பில்லியன் கணக்கான சொத்துக்கள், நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர உறவுகள், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறுக்கே நிற்கின்றன.

ஆனால், ஒரு முஸ்லீம் ஆண், மிக எளிதாக விவாகரத்துப் பெற்றுவிட முடியும். எனவே, ஷெய்க் முகமதுவிடமிருந்து, இளவரசி ஹயா விவாகரத்துப் பெற வேண்டுமெனில் பல தடைகளை தாண்ட வேண்டியதிருக்கும்.

முஸ்லீம் மத சட்டப்படி, விவாகரத்துப் பெற்ற ஒரு பெண்மணி, தனது குழந்தைகளை குறிப்பிட்ட வயது வரம்பை அடையும் வரையிலும் பராமரிக்கலாம். அதேசமயம், அக்குழந்தைகளின் சட்டப்பூர்வ பாதுகாப்பு மற்றும் அவர்களின் படிப்பு மற்றும் இதர செலவினங்களின் பொறுப்பு தந்தையிடமே செல்லும்.

ஷெய்க் முகமதுவின் மகள் ஷெய்கா லதீஃபா வழக்கு விவகாரத்தில் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தியாவுக்கு வந்து, அங்கிருந்து அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்றபோது இடையிலேயே ஷெய்கா லதீஃபா பிடிபட்டார்.

ஆனால், அதுமுதல் அவர் வெளியுலகிற்கு வரவேயில்லை. ஆனால், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சனுடன் அவர் சந்தித்த புகைப்படம் மட்டும் வெளியாகி, அவர் உயிருடன் இருப்பதை உலகிற்கு தெரியப்படுத்தியது. இந்த சந்திப்பை திட்டமிட்டு ஏற்பாடு செய்தவர் ஹயாதான் என்று கூறப்படுகிறது. இளவரசி ஹயா தனது மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவும் அறியப்படுபவர்! ஷெய்கா லதீஃபா தொடர்பான வழக்கில் ஹயாதான் முக்கிய சாட்சி!

துபாய் ஆட்சியாளர் ஷெய்க் முகமது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற மனைவி ஹயாவுக்கு எப்படியும் விவாகரத்து வழங்கிவிடுவார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

– மதுரை மாயாண்டி