தான் தொகுத்து வழங்கும் டி.வி. நிகழ்ச்சி ஒன்று குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது ஒரு கேள்விக்கு பதில் அளித்த கமல், “நடிகர் ரஜினி, இப்பொழுதுதான் சிஸ்டம் சரியில்லை என்று சொன்னார். நான் ஒரு வருடம் முன்பே சொல்லிவிட்டேன்” என்றார். மேலும், “தமிழக அரசின் அத்தனை துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது” என்று குறிப்பிட்டார்.

அவரது கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பொறியியல் கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகர் கமல் பேசியது குறித்து  கேட்கப்பட்டது.

அன்பழகன் – கமல்

இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த அமைச்சர் அன்பழகன், “கமல் ஒரு ஆளே கிடையாது. அவன் சொல்றதுக்கெல்லாம் நான் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை” என்று ஆவேசமாக பதிலளித்தார்.

அவரது தரம்தாழ்ந்த பதில், அங்கிருந்தோரை அதிர்ச்சி அடையச்செய்தது. மேலும் அவரது பேட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதோடு, சமூகவலைதளங்களில் வைரலாகி தமிழகம் முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. “அமைச்சர் பதவி வகிப்பவர் இப்படி தரம்தாழ்ந்து பேசலாமா” என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து பதிவுகள் இட்டனர்.

ஆனால் தமிழ்த் திரையுலகில்  உச்ச நட்சத்திரம் ரஜினியில் இரு்து சாதாரண நடிகரோ இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்று இதர பிரிவினரோ கண்டனம் தெரிவிக்கவில்லை. கனத்த மவுனமே நிலவியது.

எஸ்.வி. சேகர்

“தமிழகத்தின் மூத்த மிக முக்கிய கலைஞரான கமலுக்காக திரையுலகில் எவரும் குரல் கொடுக்கவில்லையே” என்று பலரும் ஆச்சரியமும் வேதனையும் அடைந்தனர்.

இந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் மட்டும் தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “மூத்த கலைஞர் கமலை இப்படி மரியாதை இன்றி பேசிய மந்தி ரிக்கு திரைத்துறையினர் சார்பாக என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு  பதிவில், “மூத்த கலைஞர் கமலை மரியாதை இன்றி பேசிய மந்தி ரிக்கு திரைத்துறையினர் சார்பாக கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு பதிவுகளிலும் “மந்தி  ரி” என்று குறிப்பிட்டுள்ளது இயல்பாக நடந்தாதா என்பது தெரியவில்லை. அவரது ட்விட்டர் பதிவிலும் இதே போல உள்ளது.

எஸ்.வி. சேகரின் கண்டன பதிவு

ஆக, திரைத்துறையில் இருந்து கமலுக்காக வெகுண்டு கண்டனம் தெரிவித்த ஒரே ஒருவர் எஸ்.வி.சேகர் மட்டும்தான்!