மைசூரு: இந்தாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுள் ஒருவர் துளசி கவுடா. இவரின் இன்னொரு பெயர் ‘காடுகளின் கலைக்களஞ்சியம்’.

தற்போது 72 வயதாகும் இவருக்கு, இப்பெயரை வைத்தவர்கள் சூழல் ஆர்வலர்கள். கர்நாடகத்தின் ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், கடந்த 60 ஆண்டுகளாக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார்.

அவை, தனி மரங்களாக வளரும்வரை அவற்றை பராமரித்து வந்துள்ளார். நமது பார்வையில் கல்வியறிவற்ற இவருக்கு தாவரங்கள் குறித்த விரிவான பார்வை இருந்துள்ளது.

காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக, கர்நாடக வனத்துறையினரே இவரின் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர். மேலும், இவரிடமிருந்து அரியவகை தாவரங்கள் மற்றும் மூலிகைகள் குறித்து அறிந்துகொள்ள பல்வேறு நாடுகளிலிருந்தும் இவரை நாடிவருகின்றனர் பலர்.

இவரின் இயற்கை அறிவைக் கண்டு வியக்கும் அத்தகையோர் இவருக்கு அளித்தப் பட்டம்தான் ‘காடுகளின் கலைக்களஞ்சியம்’.