பூங்கொத்து, சால்வை போன்றவற்றை வழங்க வேண்டாம்! டிடிவி தினகரன்

Must read

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தனக்கு கட்சியினர் பூங்கொத்து, சால்வை போன்றவற்றை வழங்க வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை நெருங்கும் நிலையில், பொதுமக்‍கள் போதிய விழிப்புடன் இருக்‍க வேண்டும் என்றும், பிரச்சாரக்‍ களத்தில் கழகத்தினர் தனக்‍கு சால்வை, பூங்கொத்து மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை அறவே தவிர்க்‍க வேண்டும் எனவும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து,  அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
குறுகிய கால இடைவெளியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டாலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்கே உரிய இயல்பான குணமான அர்ப்பணிப்பும் சுறுசுறுப்பும் கலந்த வேகத்தோடு களப்பணி ஆற்றிவருவதை ஒவ்வொரு நாளும் தான் கண்கூடாகப் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். தான் இன்னும் செல்லாத பகுதிகளில் இருந்தும்கூட உங்களின் உழைப்பு பற்றி வரும் தகவல்கள் தனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை தனியாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித் தலைவி அம்மாவின் உண்மையான ஆட்சியை நாம் அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வெற்றி இலக்கை நோக்கிய உங்களின் பயணம் மனநிறைவைத் தரும் அதே வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கடந்த மாதம் வரை ஓரளவு கட்டுக்குள் இருந்த கொரோனா நோய், கடந்த சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கடந்த சில தினங்களாக அதிவேகத்தில் பரவும் கொரோனோ, இரண்டாவது அலையாக உருவெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வருகின்றன – இந்த அபாயகரமான சூழலில் கழகத் தோழர்களான நாமும் விழிப்புணர்வோடும், போதிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையோடும் இருக்க வேண்டியது அவசியம் என்றும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடம் பிரச்சாரம் செய்யச் செல்லும்போதும், தான் உள்ளிட்ட கழக முன்னணியினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்யவரும் போதும் போதிய சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் – முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் – மிக முக்கியமாக, தான் பிரச்சார களத்திற்கு வரும்போது, தனக்கு சால்வை அணிவிப்பது, பூங்கொத்து கொடுப்பது, பரிசுப் பொருள்கள் கொடுப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

ஜனநாயகத்தை வலுப்படுத்த பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கெடுப்பது அவசியம் என்றாலும், கொரோனா பேரிடர் நம்மைவிட்டு முழுமையாக நீங்காத நிலையில், இன்னும் சொல்லப்போனால், இரண்டாவது அலையாக நம்மை நெருங்கும் ஆபத்து உள்ள சூழலில், மிகுந்த விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் தேர்தல் களத்தை அணுகவேண்டும் – தனிமனித பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

More articles

Latest article