டில்லி:

அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணி  என்ற புதிய அணியினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளனர்.

இது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் கமிஷனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு அணியினரும் சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி உரிய ஆதாரங்களையும், பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். இதுதொடர்பான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில்,  தற்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அணி என்ற புதிய அணி  ஒன்று உருவாகி உள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, எடப்பாடி அணி, நடராஜன் அணி, தினகரன் அணி என பல்வேறு அணிகள் உள்ள நிலையில் தற்போது அதிமுக தொண்டர்கள் அணி என்று புதிய அணி ஒன்று உருவாகி உள்ளது.

இந்த அணியினர்,   தொண்டர்கள் இயக்கம் தொண்டர்களுக்கே என்ற  கோஷத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய அணியைச் சேர்ந்த 5 பேர் டில்லி சென்று தேர்தல் கமிஷனில் கொடுத்துள்ளனர். அத்துடன் ம் அ.தி.மு.க.வை சேர்ந்த 1,300 உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்ற ஆவணங்களையும் அவர்கள் தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கட்சியும், சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்று அ.தி.மு.க.வின் இரு வேறு தரப்பினர் தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக உரிமை கோருகிறார்கள்.

தகுதியுள்ள கடைக்கோடி தொண்டனும் கட்சியை வழி நடத்தலாம் என்று ஜெயலலிதா கூறி யிருந்தார். உட்கட்சி தேர்தலை சந்தித்து கடைக்கோடி தொண்டரும் பொதுச் செயலாளராக வரலாம் என்றே அ.தி.மு.க. சட்டவிதிகளிலும் கூறப்பட்டு உள்ளது.

எனவே, தேர்தல் ஆணையமே உட்கட்சி தேர்தலை நடத்தி, தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாள ரிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

அதுவரை எந்த அணிக்கும் சின்னத்தை வழங்கக்கூடாது. இதுதொடர்பான வழக்கில் எங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்