டில்லி,

ந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே – பிரதமர் மோடியுடன் இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது.

அப்போது, தமிழக மீனவர்கள் விஷயத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்றும்,மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று மோடி கண்டிப்புடன் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்ல இருக்கும் நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கே  5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளளார்.

நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி – ரணில் விக்கிரமசிங்கேவுடனான சந்திப்பு நடைபெற்றது.

மதிய உணவுடன் கூடிய இச்சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

அப்போது, இரு தலைவர்கள் முன்னிலையில் இலங்கையில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் பொருளாதாரம், தொழில்நுட்ப வளம் சார்ந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து இரு தலைவர்கள் மத்தியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை அம்சங்கள் குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், இலங்கையில் அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவை நீடிக்க இந்தியா தொடர்ந்து அந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி.

பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே நிலுவையில் இருப்பதால், அதை விரைந்து முடித்து சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று இரு தலைவர்களும் விரும்பினர்.

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்நாட்டுப் போருக்கு பிந்தைய சூழ்நிலை, போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவது, மனித உரிமைகள் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்த ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின்படி செயல்படுவோம் என்று இலங்கை அளித்த உறுதிமொழியை இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

மேலும், போருக்குப் பிந்தைய நிலைமை தொடர்பாக இலங்கை அரசு நியமித்த குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற முழு ஈடுபாடு காட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லை தாண்டியதாக பிடிபட்டால், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தி தாயகம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை பிரதமர் ரணிலை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்த விஷயத்தில் பிடிபடும் மீனவர்கள் மீது எந்த நிலையிலும் எந்தவித தாக்குதலிலும் ஈடுபடக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கொழும்பில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விஷயங்களை யும் அந்தக் குழு அளித்துள்ள பரிந்துரைகளையும் நிறைவேற்ற இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என இலங்கை பிரதமர் ரணிலும் நமது பிரதமர் மோடியும் விருப்பம் தெரிவித்தனர்.

இந்திய மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான பயிற்சி அளித்து அவர்களை ஊக்குவித்து வரும் திட்டம் குறித்து இலங்கை பிரதமரிடம் நமது பிரதமர் மோடி விளக்கினார்.

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் புத்த மத திருவிழா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான அழைப்பிதழை முறைப்படி  ரணில் பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையில்,  இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை அவர் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி (கப்பல்), சுஷ்மா ஸ்வராஜ் (வெளியுறவு), ராஜ்நாத் சிங் (உள்துறை) ஆகியோர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினர்.

அதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்துப் பேசினர்.