சென்னை: தமிழக தலைநகரில் கொரோனா பரவல் விகிதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படவில்லை என்பதால், மக்கள், குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்கு முகக்கவசம் அணிதல் & சமூக இடைவெளி உள்ளிட்ட அம்சங்களைப் பின்பற்ற வேண்டுமென்று சென்னை மாநகர கமிஷனர் ஜி.பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “ஒவ்வொருநாளும் நாங்கள் 20 முதல் 25000 இ-பாஸ் விண்ணப்பங்கள் வரை பெறுகிறோம். தொற்றுவோரின் எண்ணிக்கையில் சிறிய உயர்வு காணப்படுகிறது மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை, சென்னையில் சுமார் 22 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கேட்டுக் கொள்வது என்னவென்றால், யாரும் அறிகுறிகளை மறைக்க வேண்டாம் என்பதுதான். ஏனெனில், இறப்பை குறைப்பதே எங்களின் முதன்மை லட்சியம்.

தங்களுக்கான அறிகுறிகளை மறைப்பதால், குறைந்த வயதுள்ள நபர்களும் மரணம் அடைகிறார்கள். சரியாக செயல்பட்டிருந்தால் இந்த மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும்” என்றுள்ளார் அவர்.