குடிநீர் பிரச்சினையில் கவனம் செலுத்துவதால், உள்ளாட்சி தேர்தல் பற்றி அரசு இன்னும் சிந்திக்கவே இல்லை என்றும், மக்களவை தேர்தல்லில் காங்கிரஸ் தான் திமுகவை தூக்கி சுமந்ததாகவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக விருதுநகரை வைத்துள்ளோம்.

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் தான் எங்கள் கவனம் உள்ளது. எனவே தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து எங்களுக்கு சிந்தனை இல்லை. அதே நேரத்தில் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.

மழை பெய்ய வேண்டி நாங்கள் யாகம் நடத்துகிறோம். தி.மு.க.வினர் குடிநீர் பிரச்சினையை பெரிதாக்கி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஜோலார்பேட்டை என்ன ஆந்திராவிலா இருக்கிறது ? இல்லை கர்நாடகாவில் இருக்கிறதா ?

தமிழ்நாட்டில் உள்ள தண்ணீரையே தமிழ் நாட்டுக்குள் கொண்டு வர விடமாட்டோம் என்று தடுக்கிறார்கள். பின்னர் எப்படி இவர்களால் கர்நாடகா தண்ணீரை கேட்க முடியும்? குடிநீர் பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

கி.வீரமணி கடவுள் இல்லை என்கிறார். நாங்கள் கடவுள் இருக்கிறார் என்று சுவாமி கும்பிடுகிறோம். எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோவிலில் சாமி கும்பிட்டார். ஜெயலலிதாவும் திருப்பதி உள்ளிட்ட அனைத்து கோவில்களுக்கும் சென்றார். எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் யாகம் நடத்துகிறோம். கி.வீரமணிக்கு என்ன கொள்கை இருக்கிறது ? இந்துக்களை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கொள்கை.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் என்ற பல்லக்கைத் தூக்கியதால்தான் திமுக வெற்றி பெற்றது. தமிழகத்தை பொறுத்த மட்டிலும் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

நேரு குடும்பம், ராஜீவ் குடும்பம், அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக மக்கள் அளித்த வாக்குகள்தான், திமுக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவைச் சுமந்தது. திமுக, காங்கிரசை சுமக்கவில்லை. மற்ற கட்சிகளை வேண்டுமானால் திமுக சுமந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.