யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தி பேசியதாக ஆளும் திமுக மற்றும் அதனை தோழமைக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

ஆளுநரின் இந்த பேச்சைக் கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12 ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தவுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனாதனத்துக்கும் வர்ணாஸ்ரமத்துக்கும் ஆதரவாக பொதுமேடைகளில் முழங்குவதை முதல் கடமையாக செய்து வரும் ஆளுநர் ஆர். என். ரவியின் பேச்சுக்கள், நடவடிக்கைகள், செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குரியதாகவும், மர்மமானதாகவும் உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் அங்கிரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஆளுநரின் போக்கைக் கண்டித்து வரும் 12ம் தேதி மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது.