சென்னை: ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை இழந்த 3வது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி.

ஏற்கனவே அதிமுக ஆட்சியின்போது, ஊழல் வழக்கில்,  அப்போதைய அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தங்களது பதவிகளை இழந்த நிலையில், தற்போது பொன்முடி அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். திமுகவைச் சேர்ந்த ஓர் அமைச்சர் ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அமைச்சர் பதவியை இழந்துள்ளது  இதுவே முதல்முறை.

கடந்த திமுக ஆட்சியின்போது,  வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் அவர்களுக்கு  3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், பொன்முடி தரப்பில்  விடுத்த வேண்டுகோளை ஏற்று, தண்டனையை ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும்.  மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள்.

இந்த வழக்கில் சிறை தண்டனை தீர்ப்பு காரணமாக பொன்முடி தனது பதவியை இழந்துள்ளார். அதே நேரத்தில்,  அவர் சிறை தண்டனை முடிந்து,. விடுதலை செய்யப்பட்டாலும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தனது எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை அவர் இழந்துள்ளார்.

இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் செல்வகணபதி அதிமுகவில் இருந்த காலத்தில் செய்த ஊழல் வழக்கால் தண்டனை பெற்றிருந்தார். ஆனால், மேல்முறையீட்டின்போது, அவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், அவர் தகுதி இழப்பில் இருந்து தப்பித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது 1991-1996 காலக்கட்டத்தில்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் டி.எம்.செல்வகணபதி. (தற்போது திமுகவில் உள்ளார்)  இவர் மீது சுடுகாட்டு கூரை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தியது.  இந்த வழக்கில் செல்வ கணபதிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், தனது எம்.பி பதவியை இழந்த செல்வகணபதி, தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதற்கிடையே, சிறைத் தண்டனையை எதிர்த்து செல்வகணபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில், செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்துசெய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஊழல் வழக்கில்,  முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தலைவருமான மறைந்த  ஜெயலலிதாவும், அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் பதவியை இழந்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது,  அமைச்சர் பதவியில் இருந்தபோதே, ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், தகுதியிழப்பை சந்தித்த  3வது நபராக பொன்முடி உள்ளார்.

பதவி இழந்தார் அமைச்சர் பொன்முடி – 3 ஆண்டு சிறை! சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி