சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில்  குற்றம் நிரூபணம் ஆன நிலையில்,  அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி குற்றவாளகிள் என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டு உள்ளது. இதனால் பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார்.

நீதிபதி ஜெயச்சந்திரன் 85 பக்கத்தில் தீர்ப்பை எழுதி உள்ளார். அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி, அவரது மனைவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை அறிவித்து தீர்ப்பளித்து உள்ளது.  மேலும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை கருத்தில் கொள்ளாமல் வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது என்றும் குற்றம் சாட்டி உள்ளது.

கடந்த 2006-2011 ஆண்டு மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான  திமுக ஆட்சியின்போது உயர்கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்தைவிட ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை கடந்த 2016 ஆம் ஆண்டு விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விழுப்பும் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கு  வேலுாரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிபதிக்கு மாற்றும்படி உத்தரவிடப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்படி, 2023ம் ஆண்டு ஜூலை 16ல், வேலுாருக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கை, மாவட்ட முதன்மை நீதிபதி வசந்த லீலா விசாரித்தார். வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோரை விடுதலை செய்து, தீர்ப்பு வழங்கினார். அதே மாதத்தில், பணி ஓய்வும் பெற்றார்.

இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்ததும், பல அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், பலர் மீதான குற்றச்சாட்டுக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தி போல செயல்படுவதாகவும், உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விமர்சனம் செய்து, பல ஊழல் வழக்குகளை தானாகவே மீண்டும் விசாரணைக்கு ஏற்றார்.

எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கான எதிரான வழக்குகளை, உயர் நீதிமன்றத்தில் விசாரிப்பவர், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அதன் அடிப்படையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து பிறப்பித்த உத்தரவில்,  விழுப்புரம் நீதிமன்றத்தில் பெரும்பாலும் விசாரணை முடியும் தருவாயில், வேலுார் நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றப்பட்டதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றிய நடைமுறையில் தவறு நடந்திருப்பதை உணர முடிந்தது என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன். அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து நேற்று (டிசம்பர் 19)உத்தரவிட்டார். பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். மேலும், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை டிசம்பர் 21 ஆம் தேதி ( இன்று – வியாழக்கிழமை) காலை 10.30மணிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம், பொன்முடியும் அவரது மனைவியும் நேரிலோ, காணொலி வாயிலாகவோ ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வழக்கு இன்று காலை விசாரணை தொடங்கியது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வயதை காரணம் காட்டி அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடத்து, அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் இன்று காலை  சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த நீதிபதி அவர்களுக்கு தண்டனை விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி, சொத்துக்குவிப்பு வழக்கில்  குற்றம் நிரூபணம் ஆன நிலையில்,  அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி குற்றவாளகிள் என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டு உள்ளது.  அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஏ1 தற்போது உயர்கல்வி அமைச்சராக இருப்பதால் 30 நாட்களுக்கு தண்டனையை நீதிபதி நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தீர்ப்பில்  நீதிபதி ஜெயச்சந்திரன் கூறி உள்ளார்.

குற்றவாளி என உறுதியானதால், பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார். 

பொன்முடி தீர்ப்பு நகல் (85 பக்கம்) பெற கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்…

ஏற்கனவே ஊழல் முறைகேடு தொடர்பாக,  திமுக  அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் உள்ள நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடி 2வதாக சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து – வரும் 21 ல் தண்டனை விவரம் அறிவிப்பு! அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதிமன்றம் அதிரடி