திமுக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலமாக வரிகளை உயர்த்த திட்டம்! டிடிவி தினகரன்

Must read

சென்னை: திமுக வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலமாக வரிகளை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது தெரிய வருகிறது. இது  ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’  என அமமுக தலைவர் டிடிவி தினகரன்  கூறியுள்ளார்.

கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற நிதி மற்றும் நிர்வாக சீர்கேடுகளை திமுக அரசு வெள்ளை அறிக்கையாக நேற்று வெளியிட்டது. அத்துடன், வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என்றும், தண்ணீருக்கு மீட்டர் பொருத்தி காசு வசூலிக்க வேண்டும் என்றும் சொத்து வரி, வாகன வரி, மீன் கட்டணம் போன்றவை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்கள், திமுக அரசு வருமானத்தை பெருக்கும்  வரி உயர்த்தும் நோக்கத்தில் உள்ளது என்பதை கோடிட்டு காட்டியுள்ளது.

இந்த நிலையில், அமுமுக தலைவர்  டிடிவி.தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது

அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்பதெல்லாம் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’ அமைந்துவிடும்.

அதற்குப் பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. ஒரு லட்சம் கோடியை அதற்கு காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அப்படி செய்யாமல் வெறுமனே அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டு பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே, யாரோ சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More articles

Latest article