தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி முதன்முதலாக பதவியேற்றுக் கொண்ட நாள் இன்று.

கடந்த 1960ம் ஆண்டு பிப்ரவரி 10ந்தேதி தமிழக முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 58 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

தற்போது 93 வயதை எட்டியுள்ள கருணாநிதி இதுவரை 5 முறை தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் பணியாற்றி உள்ளார்.

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகி லுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்து வேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

கருணாநிதி, தனது பள்ளி பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டி ருந்தார்.

பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13-வது வயதிலேயே சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தை காட்டினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழகத்தில் தலைமை தாங்கி நடத்தினார். 1957-ம் ஆண்டு திமுக சார்பில் குளித்தலையில் போட்டியிட்டு, முதன்முறையாக தனது சட்டமன்ற வரலாற்றை தொடங்கினார்.

1967-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அதையடுத்து அப்போதைய திமுக தலைவரான அறிஞர் அண்ணாதுரை 1967ம் ஆண்டு மார்ச் 6ந்தேதி முதல்வராக பதவி ஏற்றார்.

இரண்டு ஆண்டுகள் அண்ணாதுரை ஆட்சி செய்த நிலையில் உடல்நலமில்லாமல், 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ந்தேதி மறைந்தார். அதைத்தொடர்ந்து, அப்போதைய நிதி அமைச்சர் வி.ஆர்.நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக பதவி வகித்தார்.

அதைத்தொடர்ந்து கருணாநிதியை கட்சி தலைவராக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ததால், 1967ம் ஆண்டு பிப்ரவரி 10ந்தேதி தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக கருணாநிதி பதவி ஏற்றார். தொடர்ந்து, 1971-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி வரை 693 நாட்கள் முதல்வராக செயல்பட்டார்.

2-வது முறையாக 1971-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதலமைச்சராக பதவி ஏற்று, 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை பதவியில் நீடித்தார்.

பின்னர் 3வது முறையாக  1989-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி  முதல்வராக பதவி ஏற்று 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி வரை 733 நாட்கள் முதல்வராக இருந்தார்.

4-வது முறையாக 1996-ம் ஆண்டு மே 13-ந்தேதி முதல்வராக பதவி ஏற்று 2001-ம் ஆண்டு மே 13-ந்தேதி வரை 1826 நாட்கள் முதல்வராக இருந்தார்.

5-வது முறையாக 2006-ம் ஆண்டு மே 13-ந்தேதி முதல்வராக பதவி ஏற்று, 2011-ம் ஆண்டு மே 15-ந்தேதி வரை சுமார் 1828 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.