சென்னை:  பாஜகவுடன் திமுக கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதாக, பொன்.ராதாகிருஷ்ணன் கொளுத்திப்போட, அதற்கான வாய்ப்பே கிடையாது என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்  மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நேற்று வெளியானது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக முத்த தலைவர் பொன்னார்,  “2021-ல் தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமையும்… அதில் அதிமுக இருக்கலாம் திமுக இருக்கலாம் அல்லது பிற கட்சிகள் இருக்கலாம்.  சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சியோடு கூட்டணி சேர்வது என்பது குறித்து தலைமை முடிவு எடுக்கும்” என்று கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு அதிமுக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அமைச்சர் ஜெயக்குமாரும் கண்டனம் தெரிவித் திருந்தார்.

இந்த நிலையில்,  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ,  “திமுக கூட்டணியில் யார் இடம்பெற வேண்டும் என்பதை மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். தேர்தல் நேரத்தில் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இடம்பெறலாம் என்றார்.

மக்கள் விரோத பாஜகவின் நடவடிக்கைகளை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது,  மேலும் கடுமையாக எதிர்ப்போம் என்று கூறியவர்,  திமுக கூட்டணியில் பாஜகவுக்கு இடமில்லை என்றும்,  அதிமுக – பாஜக கூட்டணியில் அதிருப்தி நிலவியிருக்கலாம் அதனால்கூட இப்படியொரு கருத்தை பொன்னார் தெரிவித்தி ருக்கலாம்”  என்றும் கூறினார்-

எடப்பாடி அரசின் செயல்பாடுகளால் மக்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை எடப்பாடி உணரவில்லை. மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். மக்களுக்கு எதிரான, தமிழர்களை புறக்கணிக்கிற நிலையை அதிமுக தொடர்ந்து எடுத்து வருகிறது. அதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.