தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், திமுகவும் அதிமுகவும், முதல்முறையாக, இந்த 2021 சட்டமன்ற தேர்தலில்தான் கிட்டத்தட்ட சமஅளவு இடங்களில் களம் காண்கின்றன.

கடந்த 1977ம் ஆண்டிலிருந்து பார்க்கையில், திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள், சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் இடங்களில், மிகக்குறைந்த வித்தியாசம் இருப்பது இத்தேர்தலில்தான்.

இத்தேர்தலில், உதயசூரியன் சின்னம் 188 இடங்களிலும், இரட்டை இலை சின்னம் 191 இடங்களிலும் களம் காண்கிறது.

இதற்கு முன்னர், கடந்த 1991 மற்றும் 1996 தேர்தல்களில், இரண்டு கட்சிகளின் சின்னங்களும் களம் கண்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் குறைந்த வித்தியாசங்கள் இருந்துள்ளன.

ஆனால், இந்த தேர்தலில்தான் அந்த வித்தியாசம் மிகவும் நெருங்கி வந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், திமுக ஒரு பெரிய கூட்டணியை கட்டமைத்த அதேவேளையில், தனது சின்னத்தை 188 இடங்களில் களமிறக்கி, தேர்தலுக்கு முன்பாகவே ஒருவகையில், வெற்றியை ஈட்டிவிட்டது!