சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கட்சியை வழிநடத்தி வரும், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவுக்கு யார் அதிக தொகுதிகள் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று, பிப்ரவரி 7ந்தேதி நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்களை கூட்டத்தின்போது அறிவித்தார். அதன்படி, 14 மக்களவை தொகுதிகள், 1 ராஜ்யசபா தொகுதி ஆகியவற்றை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று அதிரடியாக கூறினார்.
இதனால் அவரது கட்சியை கூட்டணியில் சேர்ப்பதில் பாஜக, அதிமுக போன்றவை தொடக்கத்தில் தயக்கம் காட்டின. ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க முன்வராத அதிமுக, கூட்டணி தொடர்பாக பல கட்ட பேச்சுவாத்தையை முன்னெடுத்து வந்தது. இதற்கிடையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பாக தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். இருந்தாலும் அதிமுக இடையே மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இன்று காலை அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போதுதான், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 20ந்தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளதால், திமுக இன்று காலை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என அறிவித்து உள்ளது. இதற்கு முன்னதாக இன்று அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் தேமுதிகவுடன் கூட்டணி என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்! பிரேமலதா