மும்பை

அதிருப்தி எம் எல் ஏக்கள் தங்கி உள்ள ஓட்டல் வாசலில் கொட்டும் மழையில் போராடிய காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் – மஜத கூட்டணியை உடைக்க பாஜக சதி செய்து வருவதாக இரு கட்சியினரும் குற்றம் சாட்டி வந்தனர். இதை பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் – மஜத கட்சியை சேர்ந்த 10 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளனர்.

அவர்களை சந்திக்க மூத்த காங்கிரஸ் தலைவரான டிகே சிவகுமார் மும்பை சென்றுள்ளார்.  சிவகுமாருடன்  மிலிந்த் டியோரா, சிவராமே கவுடா, ஜிடி தேவேகவுடா மற்றும் பலர் சென்றுள்ளனர். இவர்களைக் காண கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். அத்துடன் இவர்கள் யாரையும் உள்ளே விடக் கூடாது என அந்த உறுப்பினர்கள் மகாராஷ்டிர மாநில காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

அதை ஒட்டி ஓட்டலை சுற்றி மகாராஷ்டிர மாநில ரிசர்வ் காவல்துறையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இந்த ஓட்டல் வாசலில் சிவகுமார் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தில் கூட்டமாக யாரும் கூடி நிற்கக் கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொட்டும் மழையில் சிவகுமார் உள்ளிட்டோர் ஓட்டல் வாசலில் போராட்ட ம் நடத்தி உள்ளனர்

இதையொட்டி காவல்துறை கூடுதல் ஆணையர் மனோஜ் சர்மா அங்கு வந்து சிவகுமார் உள்ளிட்டோரிடம் பேசி உள்ளார்.

அவரிடம் சிவகுமார் தாம் சட்ட ஒழுங்குக்கு இடையூறு விளைவிக்க எண்ணவில்லை எனவும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி சட்டப்பேரவை உறுப்பினரளை காண வந்துள்ளதாகவும் கூறி உள்ளார். மேலும் தாம் அதே ஓட்டலில் தங்க அறை பதிவு செய்ததை ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்துள்ள்தாகவும் தெரிவித்துள்ளார்.

இதே தகவலை அங்கிருந்த செய்தியாளர்களிடமும் சிவகுமார் தெரிவித்தார்.

ஆனால் உள்ளே இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகுமாரை சந்திக்க மறுத்துள்ளனர். மழையிலும் விடாது போராட்டத்தை தொடர்ந்த சிவகுமார் கைது செய்யபப்ட்டுள்ளார். இது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பையும் சர்ச்சையையும் உண்டாக்கி இருக்கிறது.