பெங்களூரு:

மானம், மரியாதை இருந்தால் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர்  எடியூரப்பா கூறி உள்ளார்.

கர்நாடக அரசுக்கு எதிராக 14 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், அங்கு அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக கவர்னர் வஜுபாலாவை சந்தித்த முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா, பதவி விலகிய 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு அறிவுரை கூறுங்கள் என்று மனு கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா,  கர்நாடக மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். மேலும் மந்திரிகளும் தங்கள் பதவியை  ராஜினாமாவை  செய்துள்ளனர். இதன் காரணமாக  ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மையை குமாரசாமி அரசு இழந்துவிட்டது.

இதனால், குமாரசாமி முதல்வர் பதவியில் இருந்து உடனே விலக வேண்டும் என்றும், மானம், மரியாதை இருந்தால் குமாரசாமி தானாகவே ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், குமாரசாமி அரசு பதவி விலக ஆளுநர் வலியுறுத்த பாஜக  கோரிக்கை விடுக்கும் என்றவர்,  இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் சேர்த்து சட்டசபையில் பாஜகவின் பலம் தற்போது 107 ஆக உயர்ந்துள்ளது. எனவே, தார்மீக நெறிகளின்படி முதல் மந்திரியாக நீடிக்க குமாரசாமிக்கு எந்த தகுதியும் இல்லை.

மக்களின் நலன் கருதி கவர்னர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.