டில்லி:

ங்களது ராஜினாமா கடிதங்களை ஏற்க மறுப்பு தெரிவிப்பதாக, கர்நாடக சபாநாயகர் மீது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது கர்நாடக அரசியலில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில்  காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  ஆட்சிக்கு எதிராக குரல்கொடுத்து வரும் அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேர், தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அவர்கள் கடிதம் கொடுத்த அன்று சபாநாயகர் இல்லாத நிலையில், நேற்று ராஜினாமா கடிதங்களை பரிசீலித்த சபாநாயகர் ரமேஷ், ராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்ததுடன், தன்னிடம் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தற்போது மும்பை ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 13 பேர் சார்பில், சபாநாயகர் உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மனுவில், தங்களது ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர்  எந்த முடிவும் எடுக்கவில்லை. வேண்டு மென்றே காலம் தாழ்த்துகிறார். அரசியலமைப்பு சட்டப்படி சபாநாயகர் தனது கடமையை செய்யவில்லை என்றும்,  தங்கள் மனுவை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தனர்.

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்

இதையடுத்து, வழக்கை  நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் டி.கே.சிவகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது-

இந்த சூழ்நிலையில்,  கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் சிக்கல் குறித்து, மக்களவையில் விவாதிக்க திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.