பிரஞ்ச் ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்ற டிஜோகோவிக் இந்த ஆண்டில் எஞ்சியுள்ள கிராண்ட் ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் பட்டத்தையும் வெல்வேன் என்று கூறியிருக்கிறார்.

நேற்று முன்தினம் நடந்த பிரெஞ்ச் ஓப்பன் போட்டி இறுதியாட்டத்தில் கிரீஸை சேர்ந்த ஸ்டெபானோ சிசிபாஸை 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற நேர்செட்டுகளில் வென்று இந்த ஆண்டின் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்.

முதல் இரண்டு செட்டுகளை பறிகொடுத்த செர்பிய வீரர் நோவக் டிஜோகோவிக் பின்னர் சுதாரித்து ஆடி வெற்றி பெற்றார் ஏற்கனவே 2016 ம் ஆண்டு பிரெஞ்ச் ஓப்பன் பட்டம் பெற்ற இவர் தற்போது இரண்டாவது முறையாக வென்றிருக்கிறார்.

இதன்மூலம் 52 ஆண்டுகளுக்குப் பிறகு பிரெஞ்ச் ஓப்பன், யு.எஸ். ஓப்பன், ஆஸி. ஓப்பன், விம்பிள்டன் ஆகிய நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் இரண்டுமுறை வெல்லும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தாண்டின் ஆஸி. ஓப்பன் பட்டத்தையும் வென்று இதுவரை ஓன்பது முறை ஆஸி. ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார் மொத்தம் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள டிஜோகோவிக் விம்பிள்டன் பட்டத்தை ஐந்து முறையும் (2011,14,15,18,19) யு.எஸ். ஓப்பன் பட்டத்தை மூன்று முறையும் (2011,15,18) பெற்றிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்ட டிஜோகோவிக் ஆட்ட முடிவில் தான் வைத்திருந்த டென்னிஸ் மட்டையை பார்வையாளராக அமர்ந்திருந்த ஒரு சிறுவனுக்கு வழங்கினார்.

“அவ்வப்போது அந்த சிறுவன் எனக்கு அளித்த உற்சாகம் மற்றும் டிப்ஸ்களால் தான் நான் இந்த போட்டியில் வெற்றி பெற்றேன்” என்று கூறினார்.

“முடியாதது எதுவும் இல்லை” என்று செய்தியாளர்களிடையே சூளுரைத்த டிஜோகோவிக் “இந்த ஆண்டு எஞ்சியிருக்கும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான விம்பிள்டன், யு.எஸ். ஓப்பன் மற்றும் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கத்தை வெல்வேன், இந்த ஆண்டு எனக்கு தங்க ஆண்டாக அமையும்” என்று கூறினார்.

டென்னிஸ் போட்டியில் ஆண்கள் யாரும் இதுவரை அந்த சாதனை படைத்ததில்லை, மகளிர் போட்டிகளில் 1988 ம் ஆண்டு நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டம் மற்றும் ஒலிம்பிக் தங்கத்தை வென்ற ஒரே வீராங்கனை ஸ்டெபி கிராப்.