யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற போர்ச்சுகல் அணிக்காக இரண்டு கோல் அடித்தார் ரொனால்டோ.

ஹங்கேரிக்கு எதிரான இந்த ஆட்டம் துவங்கும் முன் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கோகோ கோலா-வுக்கு எதிராக பலமான கோல் அடித்தார் ரொனால்டோ.

அது சமூகவலைத்தளங்களில் மட்டுமல்ல ஐரோப்பிய பங்கு வர்த்தகத்திலும் ஒரு வலம் வந்தது, இதனால், கோகோ கோலா நிறுவனத்துக்கு 29,351 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

ஆரோக்கியமாக வாழ்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு சிலரில் ரொனால்டோ-வும் ஒருவர், அவர் கலந்து கொண்ட செய்தியாளர் கூட்டத்தில் விளம்பரத்துக்காக அவர் அமர்ந்திருந்த மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை நகர்த்தி கீழே வைத்துவிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை கையில் உயர்த்திப் பிடித்து “அக்வா” என்று கூறி கோகோ கோலாவை தவிர்க்கும்படி சைகையால் உணர்த்தினார்.

சைகையால் உணர்த்தியதை புரிந்துகொண்ட அவரது ரசிகர்களால் $56.1 டாலருக்கு விற்றுக்கொண்டிருந்த கோகோ கோலா நிறுவனத்தின் பங்கை ஒரே மணிநேரத்தில் $55.22 க்கு கொண்டுவந்தனர். 88 சென்ட்டுகள் சரிவை சந்தித்ததால் 17.75 லட்சம் கோடியாக இருந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு 17.46 லட்சம் கோடியாக சரிந்தது, இதனால் சுமார் 29,351 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தனது மகன் அவ்வப்போது சர்க்கரை நிறைந்த இதுபோன்ற சோடா பானங்களை குடிப்பது எனக்கு வேதனையாக உள்ளது என்று ஏற்கனவே ஒரு பேட்டியில் ரொனால்டோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.