டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி  ரூ.3.75 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மற்ற பொருட்களை விட, டாஸ்மாக் மதுபானம் மட்டுமே ரூ.708 கோடிக்கு விற்பனையாகி உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

( நாடு முழுவதும் ரூ.3.75 லட்சம் கோடிக்கு சில்லறை விற்பனை

( நாடு முழுவதும் ரூ.52 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை

( நாடு முழுவதும்  ரூ.33 ஆயிரம் கோடிக்கு தங்கம், வெள்ளி விற்பனை

( தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் ரூ.708 கோடிக்கு மது விற்பனை

( தமிழ்நாட்டில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

( தமிழ்நாட்டில்  ரூ.315 கோடிக்கு கறிக்கோழி  விற்பனை

நடப்பாண்டு தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிககை விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொன், பொருட்கள், பட்டாசுகளை வாங்கிய வகையில்,  நாடு முழுவதும்  சில்லரை விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு  புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அதாவது, தீபாவளி பண்டிகையையொட்டி ரூ. 3.75 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ள தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிறு குறு வணிகர்கள் மட்டுமின்றி பெரு வணிகர்களும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது இந்தியாவின் சில்லரை சந்தையில் ரூ.2.75 லட்சம் கோடிக்கு விற்பனை நடைபெற்றது.  ஆனால், இந்த ஆண்டு பிரதமர் மோடி,  “உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்க வேண்டும்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அதிகரித்துள்ளது. 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனப் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது” என வர்த்தகர் அமைப்பு தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி  நாடு முழுவதும் சுமார் ரூ.52 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை நடந்ததாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஜவுளி விற்பனை நடந்திருக்கலாம் என்று வணிகர்கள் தெரிவித்தனர்.

அதுபோல, தீபாவளி பண்டிகையையொட்டி  இந்தியாவில் ரூ 33 ஆயிரம் கோடிக்கு தங்கம், வெள்ளி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகை வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தீபாவளி பண்டிகையின் காரணமாக இந்தியாவின் சில்லறை சந்தைகளில் ரூ.3.75 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் கோவர்தன் பூஜை, பயா தூஜ், சத் பூஜை, மற்றும் துளசி விழா போன்ற பண்டிகைகள் இருப்பதால்,  மேலும் 50 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தீபாவளி சீசனில் நடைபெற்ற 3.75 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த விற்பனையில், அதிகபட்சமாக  உணவு பொருட்கள் ரூ.48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகி முதலிடம் பிடித்துள்ளது.

இநகைகள் ரூ.33 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி உள்ளது, அதாவது 41 டன் தங்கமும், 400 டன் வெள்ளியும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகம்.

ஜவுளி மற்றும் ஆடைகள் ரூ.45 ஆயிரம் கோடி, இனிப்பு வகைகள் மற்றும் உலர் பழங்கள் ரூ.15,000 கோடி, அழகு சாதன பொருட்கள் ரூ.22,500 கோடி, மொபைல் போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் ரூ.30,000 கோடி, பூஜை பொருட்கள் ரூ.11,250 கோடி, சமையலறை பொருட்கள், பாத்திரபண்டங்கள் ரூ.11,250 கோடி, பேக்கரி மற்றும் இனிப்பு பொருட்கள் ரூ.7,500 கோடி, பரிசு பொருட்கள் ரூ.30,000 கோடி அளவிலும், மற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் வியாபாரம், நடைபெற்றுள்ளது.

குறிப்பாக தீபாவளி தினத்தன்று இந்தியா முழுவதும் ரூ. 5,000 கோடி மதிப்பிலான பூக்கள் மற்றும் ரூ.2,000 கோடி மதிப்பிலான பழங்கள் விற்பனையாகியுள்ளன.

கார் வாகன விற்பனையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்கு அதிகரித்துள்ளது என கார் வணிக நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது.  தீபாவளியையொட்டி, இந்த ஆண்டு,  55 ஆயிரம் மாருதி சுசூகி கார்கள் விற்பனை ஆகியுள்ளது. ஹுண்டாய் கார்கள் 10,300க்கும் மேற்பட்டவை விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு  32 ஆயிரம் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்து குறிப்பிடத்தக்கது.

இந்த விற்பனையானது, நேரடி கடைகள் மட்டுமின்றி ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மூலம் நடைபெற்றது. குறிப்பாக அமேஷான், ஃபிளிப் கார் மற்றும் பல ஆன்லைன் சில்லரை விற்பனை நிறுவனங்கள் மூலம் அமோகமாக விற்பனை நடைபெற்றுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஷ்டிவல் மூலம் வியாபாரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்களது தளத்தில் ஆன்லைன் மூலம் பொருள் வாங்கியவர்களில் 80 சதவிகிதம் பேர் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை சேர்ந்தவர்கள் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 110 கோடி பயனாளர்கள் அமேசான் தளத்தை அணுகியுள்ளனர். இதனால் அமேசான் தளத்தில் 750க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கோடிக்கணக்கிலும், 31,000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பல லட்சங்களிலும் வியாபாரம் செய்துள்ளனர்.

இது முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சமாகும். 15 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள் அமேசானில் உள்ள பிரிவுகளில் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளுக்காக முதல் முறையாக ஷாப்பிங் செய்துள்ளனர்.

டாஸ்மாக் மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டிலும் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரும் வணிகம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக அரசு நிறுவனமான டாஸ்மாக் மது பான கடைகள் மூலம், கடந்த 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.  வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் நிலையில், பண்டிகையையொட்டி மது விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி  வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களும் ம ரூ.708 கோடி மதிப்பிலான மது பானங்கள் விற்பனையாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.241.02 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. சனிக்கிழமை ரூ.220.85 கோடிக்கும், ஞாயிற்றுக் கிழமை ரூ.246.78 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது. இந்த 3 நாட்களில் மட்டும் ரூ.708 கோடி மது விற்பனை நடந்துள்ளது.  மது பிரியர்கள் 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்துள்ளனர். இதில் 11-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடிக்கும் திருச்சி-ரூ.40.02 கோடிக்கும், சேலம்-ரூ.39.78 கோடிக்கும், மதுரை ரூ.52.73 கோடிக்கும் கோவையில் ரூ.40.20 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. 12-ந்தேதி (ஞாயிறு) மண்டலவாரியாக சென்னையில் ரூ.52.98 கோடி, திருச்சி ரூ.55.60 கோடி, சேலம் ரூ.46.62 கோடி, கோவை ரூ.39.61 கோடி அளவுக்கு மது விற்கப்பட்டது. கடந்த ஆண்டு தீபாவளி 2 நாள் மது விற்பனை ரூ.431 கோடியாகும். இந்த ஆண்டு 2 நாள் விற்பனை ரூ.467.69 கோடியாகும். இதன்மூலம் கடந்த ஆண்டு சாதனையை இந்த ஆண்டு விற்பனை முறியடித்து உள்ளது.

பட்டாசு விற்பனை

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. வழக்கமான உற்பத்தியை விட இந்த ஆண்டு 50 முதல் 70 சதவீதம் வரை உற்பத்தி அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலைகளில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்த ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விற்பனையானதாக கூறப்படு கிறது.   ஆனால் சிவகாசி பகுதியில் மட்டும் தீபாவளி பண்டியையொட்டி ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

கறிக்கோழி விற்பனை

தீபாவளியையொட்டி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக அளவில், கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி,  கறிகோழி கொள்முதல் விலை ரூ.98 நிர்ணயம் செய்திருந்தாலும், வியாபாரிகள் விலையை குறைத்தே கோழிகளை பிடிக்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு உயரவில்லை. கோழிகளின் தீவன பொருட்களின் விலையும் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதனால் பெரிய அளவில் பண்ணையாளர்களுக்கு லாபம் இல்லை.

இருப்பினும் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 கோடியே 50 லட்சம் கிலோ கறிக்கோழி ரூ.315 கோடிக்கு விற்பனையானது. இது கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறிய, சிஏஐடியின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், தீபாவளி பண்டிகைக் காலத்தில் சீனப் பொருட்கள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை இழந்துள்ளன என்ற முக்கியமான புள்ளிவிபரத்தை வெளியிட்டு உள்ளார்.  மேலும் முந்தைய ஆண்டுகளில், சீன தயாரிப்புகள் தீபாவளி பண்டிகை விற்பனையில் கிட்டத்தட்ட 70 சதவீத சந்தையை ஆக்கிரமித்திருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் உள்ளூர் பொருட்கள்  அதிகளவில் விற்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

குடிகார மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு: தீபாவளி மதுவிற்பனை எவ்வளவு தெரியுமா?