சென்னை,

மிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 முதல் 20 சதவிகிதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

தமிழ்நாடு அரசு, தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில், 2016-17 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015ன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு 21,000 ரூபாய் என மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் 10,000 ரூபாய் என இருந்த தகுதி வரம்பைத் தளர்வு செய்து அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் போனஸ் பெற வழிவகை செய்யப்பட்டதைப் போலவே தற்போது 21,000 ரூபாய் என்ற சம்பள உச்ச வரம்பைத் தளர்வு செய்து அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்குப் போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

போனஸ் கணக்கிட ஏற்கெனவே 3,500 ரூபாய்  என இருந்த மாதாந்திர சம்பள உச்ச வரம்பு திருத்திய போனஸ் சட்டம் 2015-ன் படி, 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படை யில், 2016-17ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித் தொகையினைக் கீழ்க்கண்ட வாறு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இலாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். 

நட்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழி லாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும்.

பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கியதைப் போல 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டு றவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்க ளுக்கு, அந்த நிறுவனங்களின் இலாப நட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொ கையோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ வழங்கப்படும். 

 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காட்டிற்கு மிகாமல் வழங்கப்படும்.  ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400ம் அதிகபட்சம் ரூ.16800ம் பெறுவர்.  மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும்  3 லட்சத்து 69 ஆயிரத்து 610 தொழிலாளர்களுக்கு 489 கோடியே 26 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.