புதுச்சேரி,

தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு  மாநில அரசு ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில், மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி  தலைமையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்களும் அரசுச் செயலாளர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்  நாராயணசாமி,

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குரூப் சி மற்றும் குரூப் பி அரசு ஊழியர்களுக்கு 7,000 ரூபாய் போனஸும், தினக்கூலி ஊழியர்களுக்கு 1,200 ரூபாய் போனஸும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும்,  அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 11,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றார்.

மேலும், மத்திய அரசு அமல்படுத்தி உள்ள  ஜி.எஸ்.டி. வரி காரணமாக, புதுச்சேரி அரசுக்கு மாதம் 40 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, ஆகஸ்ட் மாதம் வரை 80 கோடி ரூபாய் வரை வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி டெங்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழகத்தை சேர்ந்த 40 சதவிகி தம்பேர் டெங்கு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.