பாட்னா: பீகாரில் இதுவரை வெயிலின் கொடுமைக்கு மொத்தம் 79 பேர் பலியான நிலையில், கயா மாவட்ட நிர்வாகம், பகல் 11 மணிமுதல் 4 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது என்ற தடையுத்தரவையே பிறப்பித்துள்ளது.

பீகாரில் வெயிலின் கொடுமையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்போது மரணமடையும் நபர்களின் உறவினர்களுடைய கோபம் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையாக மாறிப்போகிறது. இது அரசு நிர்வாகத்திற்கு தேவையற்ற சிக்கல்களை உண்டாக்குவதால் சில தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, காலை 10.30 மணிக்குமேல், கட்டட வேலைகள், திருமணம் உள்ளிட்ட இதர சுப நிகழ்ச்சிகளின் ஊர்வலங்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்காக கூட்டம் கூடுதல் உள்ளிட்ட எதையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில், கிராமப்புறங்களில் பணிபுரிவோரும் இந்த நேர இடைவெளியில் பணி செய்யக்கூடாது என்றும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கயா மாவட்ட நீதிபதி அபிஷேன் சிங் இந்த தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதேபோன்றதொரு உத்தரவை நாளந்தா மாவட்ட நிர்வாகமும் பிறப்பித்துள்ளது.

அரசு அறிவித்துள்ள புள்ளி விபரத்தின்படி, இதுவரை அவுரங்காபாத் மாவட்டத்தில் 35 பேரும், கயா மாவட்டத்தில் 31 பேரும், நவாடா மாவட்டத்தில் 12 பேரும், ஜமூய் மாவட்டத்தில் 2 பேரும் பலியாகியுள்ளனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் முழு எச்சரிக்கையுடனும், தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.