மதுரை: முப்படைகளின் தலைமைதளபதி மரணம் சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என மாரிதாஸ் கைது வழக்கில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை தமிழகஅரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து, தமிழகஅரசுமீதும் சந்தேகம் எழுப்பி  டிவிட் போட்ட யுடியூபர் மாரிதாஸ் தமிழக காவல்துறையில் கைது செய்யப்பட்டு  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக  மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும்,  வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் மாரிதாஸ் தரப்பில்  மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது  அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, மாரிதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.  அவர் வாதிடுகையில், “மனுதாரரை  டிவிட்டரில் 2 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் ராணுவ தளபதி இறப்பு குறித்து டிவீட் செய்திருக்கிறார். அதில் திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை உள்ளது. இது, பிரிவினைவாதத்தை தூண்டக்கூடியது. எந்த அடிப்படையில், எந்த ஆதாரத்தில் இவர் இப்படி பதிவு செய்துள்ளார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். விசாரணைக்கு பிறகுதான் இவருடைய பின்புலம் தெரியும். இவருடைய பல பதிவுகள் சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் விதத்திலும் தமிழக அரசின் மீது களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளது. எனவே, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஜி.ஆர். சுவாமிநாதன் “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திலும் சந்தேகம் எழுப்பப்பட்டதே?” அதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டதா?  என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர்,  “மாரிதாஸ் பதிவுகளை பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பார்த்தால்  என்ன நினைப்பார்கள்? தமிழக அரசு அவதூறு பரப்பும் வகையில்,  தமிழகத்தின் நேர்மைத்தன்மையை மாரிதாஸ் கேள்விக்குள்ளாக்கி  இருக்கிறார் என்று தெரிவித்ததுடன்,  மனுதாரர், ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அவர் தமிழக அரசிற்கு எதிராக, அரசியல் சூழ்ச்சியோடு இந்த பதிவை போட்டுள்ளார் என்று கூறினார்.

இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி,  “முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சுப்பிரமணிய சுவாமியும் இதுபோன்ற  சந்தேக கேள்வியை எழுப்பியிருந்தாரே? அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதா?” என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து  மாரிதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மாரிதாஸ் மீதான இந்த வழக்கு உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ளது. மனுதாரர் எந்த உள்நோக்கத்துடனும் இப்படி பதிவிடவில்லை. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக புகார் அளித்த பாலகிருஷ்ணனின் வழக்கறிஞர் புகழ் காந்தி ஆஜராகி, தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க கால அவகாசம் கோரினார்.

இதை ஏற்று வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.