மதுரை: “தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது”   என கூறிய எடப்பாடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலை வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானபோது,  எடப்பாடி பழனிசாமி மதுரையில் இருந்தார். மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைத்தார்.

அப்போது அவரிடம்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து கூறியதும், உற்சாகத்துடன், திருமண நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, தீர்ப்பை வரவேற்றதுடன்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கடுமையாக சாடினார்.

அப்போது, ஆர்.பி.உதயகுமார் இங்கு எழுப்பியுள்ள அம்மா கோயிலில் இன்று மாலை அணிவித்து, நல்ல தீர்ப்பு வர வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அங்கு இரு தலைவர்களும் அருள் கொடுத்தார்கள்; நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் வேண்டி கொண்டேன். அடுத்த சில நிமிடத்திலேயே நல்ல செய்தி வந்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு என நேற்று தகவல் வந்ததும், எனக்கு இரவு தூக்கமே வரவில்லை; தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற ஐயம் இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொடுத்த வரம். தனக்கு பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக தொடரும் என ஜெயலலிதா கூறினார். அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள், திமுகவின் பி டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டு உள்ளது. அதிமுக குடும்ப கட்சி கிடையாது; மக்களுக்காக உழைக்கும் கட்சி. இனிமேல் அதிமுக ஒரே அணிதான். மூன்றாக உள்ளது. நான்காக உள்ளது என சொல்ல வேண்டாம்.

வாக்காளர்களை அடைத்து வைத்து பிரியாணி கொடுத்தாலும் அவர்கள் எங்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள். “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்குத் தான் ஓட்டு என்றார்.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில்  வீட்டில் இருக்கும் வாக்காளர்களை.. அவர்கள் ஏழ்மையைப் பயன்படுத்தி.. ஆடு மாடுகளைப் போல சாமியான கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார்கள்.

இதுகுறித்து மத்தியில் இருக்கும் தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார் அளித்துள்ளோம். ஆனாலும், எந்த புகாரையும் அவர்கள் கண்டுகொள்ள வில்லை இது. ஜனநாயக விரோதம்.. மக்கள் விரோதம்.. ஜனநாயக படுகொலை.. அதைத்தான் இன்று திமுகவினர் செய்து வருகின்றனர்.

கடந்த காலத்தில் அவர்கள் செய்தது அனைவரும் ஞாபகம் இருக்கும். முதலில் மதுரை திருமங்கலம் பார்முலா என்றார்கள். இந்த மண்ணில் இருந்து பேசுகிறேன். திருமங்கலம் தொகுதியில் இருந்து பேசுகிறேன்” என்றவர், அருகே இருந்த ஆர். பி. உதயகுமார்  பக்கம் திரும்பி.. “இது திருமங்கலம் தானே” என்று கேட்க, அவர்களும் ஆமாம் என்றார்கள்.

திருமங்கலம் தொகுதியில் இருந்து தான் பேசுகிறோம் என்பதை உறுதி செய்த அவர், திமுகவை மேலும் கடுமையாகச் சாடினர்.

இந்த திருமங்கலத்தில் தான் திமுகவினர் தங்கள் முதல் பார்முலாவை உருவாக்கினார்கள். இப்போது ஈரோடு கிழக்கில் அவர்கள் இரண்டாவது பார்முலாவை கொண்டு வந்து உள்ளனர். தமிழ்நாடு வரலாற்றில் எந்த இடைத்தேர்தலிலும் வாக்காளர்கள் அடைத்து வைத்ததே இல்லை. நான் முதல்வராக இருந்த போதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதில் இப்படியா செய்தோம். மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்காளர்களைத் தேர்வு.. அது தான் ஜனநாயகம்.. ஆனால், அதற்குப் பதிலாக விதிகளை புறந்தள்ளி இந்த பார்முலாவை கையில் எடுத்துள்ளனர். ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல அடைத்து வைத்து.. பிரியாணி, சிக்கன், மட்டனை எல்லாம் போடுகிறார்கள். நன்கு போடட்டும். மக்களே நன்கு சாப்பிடுங்கள்.. ஆனால் வாக்கை மட்டும் அதிமுகவுக்குத் தான் போடுவார்கள். மக்கள் மீது நம்பிக்கையில்லாமல் திமுக இந்த பார்முலாவை இப்போது கையில் எடுத்துள்ளனர்” என்றார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அ.தி.மு.க. வலிமையான இயக்கம். இன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. “தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது, தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற அற்புதமான திர்ப்பு கிடைத்துள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களின் விருப்பத்தை தீர்ப்பு உணர்த்தி உள்ளது. இனிமேல் தமிழகத்தில் அ.தி.மு.க. எழுச்சியோடு பணியாற்றும்.

டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி போய்விட்டார்; இரட்டை இலை சின்னம் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை. இனி அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தீர்ப்பு  உறுதி செய்துள்ளது.  ஆட்சி நீடிக்குமா? என்ற கணிப்புகளை பொய்யாக்கி 4 ஆண்டு 2 மாதங்கள் பொற்கால ஆட்சி கொடுத்தேன். தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள  தீர்பால் எழுச்சியுடன் அதிமுக தனது கட்சி பணிகளை ஆற்றும். சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டதால் அதிமுக தலைமை குறித்து இனி கேள்வியே இல்லை. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச்செயலாளராக இருப்பேன். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உதவும் என்றார்.

மேலும், ஓ.பி.எஸ்.- டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் அ.தி.மு.க.விற்கு வந்து விட்டார்கள். சிலர் தீர்ப்புக்காக காத்திருந் தார்கள். இன்று தீர்ப்பும் வந்துவிட்டது.  ஒரு சிலரைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம். ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும்.

அதிமுக நிர்வாகிகள் கூடி விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடக்கும்.ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர் களின் எண்ணம் நிறைவேறியுள்ளது என்றார்.

தற்போது எங்களது நோக்கம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற வைப்பதே ஆகும். இதற்காக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்போம்.

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதன் காரணமாகத்தான் வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்றார்.