சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஆனித் திருமஞ்சன விழா நடைபெற்றதை முன்னிட்டு கோயிலில் உள்ள கனகசபையின் மீது பக்தர்கள் ஏறி சுவாமியை வழிபட அனுமதியில்லை என பொது தீட்சிதர்கள் சபையின் சார்பில் கனகசபை நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்புப் பலகையை அகற்ற சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் போலீஸார் கடந்த 24-ம் தேதி கோயிலுக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது பக்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதுடன், சிவன் சொத்தை தங்கள் சொந்த நிறுவன சொத்து போல் நினைத்து பக்தர்களிடம் அடாவடியில் ஈடுபடும் தீட்சிதர்களின் செயலுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்று தீட்சிதர்கள் அறிவித்தபடி கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.