மும்பை: ஷீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம்  அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் வழிபாட்டுத்தலங்களை மூட மாநில அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து,  அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் ஏப்ரல் மாதம்  மூடப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்ததுடன்,  கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும்,  இருப்பினும் கோவிலுக்குள் தினமும் வழக்கமான பூஜை நடைபெறும் என்ற கூறப்பட்டிருந்தது.
தற்போது  கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், மாநில அரசு ஏராளமான தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி வழிபாட்டுத் தலங்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகளுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.