பெங்களூரு

காங்கிரஸ் இல்லாமல் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என முன்னாள் பிரதமர் தேவே கௌடா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பாஜக முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மை இல்லாததால் ராஜினாமா செய்தார்.  அதை ஒட்டி காங்கிரசின் ஆதரவுடன் மஜத வின் குமாரசாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.  இந்நிலையில் முன்னாள் பிரதமரும் குமாரசாமியின் தந்தையுமான தேவே கௌடா பத்திரிகையாளர்களை சந்தித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அந்த சந்திப்பில் தேவே கௌடா, “குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவுக்கு பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.   அதில் சிலர் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் இருக்கலாம்.   ஆனால் அனைவரின் ஒரே குறிக்கோள் பாஜகவை எதிர்ப்பது தான்.  வரும் 2019 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் இணைக்க நான் விரும்புகிறேன்.

உண்மையை சொன்னால் கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் உதவி இன்றி பாஜகவை எதிர்த்து எங்களால் ஆட்சி அமைத்திருக்க முடியாது.   அதே போல மத்தியில் பாஜகவை ஆட்சியை விட்டு அனுப்ப வேண்டும் எனில் காங்கிரஸ் உதவி அவசியம் தேவை.   பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸ் அவசியம் தேவை.   காங்கிரஸ் இல்லாத அத்தகைய ஒரு கூட்டணிக்கு சாத்தியமே இல்லை.

கர்நாடக மக்களின் நலனை கருத்தில் கொண்டே நாங்கள் காங்கிரசின் நிபந்தனை அற்ற ஆதரவை ஏற்றுக் கொண்டோம்.   நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராகவே இருந்தோம்.    நாட்டின் நலன் கருதி முன்பு எனக்கு இழைக்கப்பட்ட பல தீமைகளையும் விழுங்கி விட்டேன்.   பழைய காயங்களை குத்திக் கிளற இது நேரமில்லை.   நான் முன்னாள் பிரதமர் என்னும் முறையில் நாட்டில் மத சார்பற்ற ஒரு அரசு அமைவதை பெரிதும் விரும்புகிறேன்.”  என தெரிவித்தார்.