ஊட்டி, சந்தங்கடை மாரியம்மன் ஆலயம்

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளைப் பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி அம்மன்கள் முப்பெருந்தேவிகளாக ஒரே தலத்தில் வீற்றிருக்கும் அரிய தலம் இது.

இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயம்.

இங்குள்ள காட்டேரியம்மன் சன்னதியில் மந்திரித்த முடிக்கயிறு கட்டுவதால் தோஷம், பிணி, பில்லி சூனியம், செய்வினை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஊட்டி நகரில் வணிகர்கள் வணிகம் செய்து வந்த காலத்தில் இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க கண்களை உடையவர்களாக திகழ்ந்தனர். தெய்வீக மணமும், முகமும் சாந்தமே உருவெடுத்த தோற்றமும் கொண்ட அவர்கள் தாங்கள் தங்க இடம் கேட்டனர்.அப்போது அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது. அருகில் இருந்த மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அப்போது மின்னல் கீற்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தோன்றி மறைந்தது. அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர்.

அதன்பின்பே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அதிலிருந்து இக்கோயில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் குளுகுளு நகரான ஊட்டியில் உள்ளது இந்த கோவில். இங்கு நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரமாண்டமாக இருக்கும்.

தேர் வீதி உலா வரும் போது பக்தர்கள் உப்பு அள்ளி வீசுகின்றனர். உப்பு நீரில் கரைவது போல் தங்கள் துன்பங்கள் முழுமையாக நீங்கி அம்மன் அருள் பெறுவதாக நம்பிக்கை.

அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஊனமுற்றவர்கள், கண்பார்வை இழந்தவர்கள் இங்குள்ள அம்மனிடம் வேண்டிக் கொண்டால் பூரண குணமடைகிறார்கள்.

ஊட்டிக்குச் சுற்றுலா செல்பவர்கள் வாய்ப்பிருந்தால் இக்கோவில் சென்று வரலாம்