தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண  முருகப்பெருமான் சிலை

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண  முருகப்பெருமான் சிலையை பற்றிய சில விவரங்கள் :-

இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெண்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, அவை

1. பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை,

2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை

கொடைக்கானலிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம்.

உலகிலேயே நவபாஷாண சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் சித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய நவபாஷாண சிலை பழனி மலை முருகன் மட்டும் தான் என்று பெரும்பாலானோரும் நினைப்பர்.

ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷாணத்தால் உருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தியும் கூட, அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள்தர வல்லவர் என்பது அந்த கோவிலுக்குச் சென்று அனுபவ ரீதியாகப் பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.

சுமார் 10/12ம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட கடைசியும் 12வது வனமும் பழனி கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலையாகும்.

பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளைச் சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்குத் தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார்.

அக்கோவிலை இறைவனிடம் வேண்டிச் சிவ பூதகணங்களால் கோவில் மற்றும் மண்டபங்களைக் கட்ட செய்தார் என்பது வரலாறு.

பின்னர் மறுபடியும் சீன நாட்டிற்குச் சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் ப்ரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார்.

அந்த சிலைதான் பூம்பாறை மலையுச்சியிலுள்ள, சேர மன்னன் தவத்தை மெச்சி பழனி முருகன் திருமணக் காட்சியளித்து, சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.