அறிவோம் தாவரங்களை – கல்யாண முருங்கை

கல்யாண முருங்கை – (Erythrina variegata)

தமிழகம் உன் தாயகம்!

வேலிகளில், வீடுகளில், வரப்புகளில் வளர்ந்திருக்கும் காப்பு மரம் நீ!

முள் முருங்கை, முள் முருக்கு என இரு வகையில் விளங்கும் இனிய மரம் நீ!

காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்ட கற்பகமரம் நீ!

சிறுநீர்ப் பெருக்கம், தாய்ப்பால் பெருக்கம், மாதவிடாய் வலி, குடல் புண்கள், காய்ச்சல், நீர்க்கடுப்பு, ரத்தசோகை,ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகை மரம் நீ!

70 அடிவரை உயரம் வளரும் இனிய மரம் நீ!

தோசை, அடைகளுக்கு  இலை கொடுக்கும் வள்ளல் மரம் நீ!

இலை, பூ, விதை, பட்டை என எல்லா வகையிலும் பயன்படும் நல்ல மரம் நீ!

சாறு, கஷாயம் எனப் பல்வகையில் பயன்படும் நல்வகை மரமே!

கை, கால்களில் சூடு வைத்துக் குழந்தைகள் விளையாட விதை கொடுக்கும் விநோத மரமே!

தண்ணீரில் நனைத்துப்பின் சட்டைக்குள் வைத்தால் வெடித்துச் சிதறும் இயல்புடைய. விதை தரும் மரமே!

கன்னிப்பெண்களுக்கு இளமையும் அழகையும் கொடுக்கும் இலை மரமே!

குழந்தைப் பேற்றைக்கொடுக்கும் கொடைபூ  மரமே!

ஆண்மையைப் பெருக்கும் அதிசய இலை மரமே!

பூவரச இலை வடிவ இலை மரமே!

வீடுகளில் வளர்க்கப்படும் மூலிகை மரமே!

மங்கையரின் உதடு போன்று சிவப்பு நிறப் பூப் பூக்கும் பெரிய மரமே!

விஷம் கொண்ட சிவப்பு விதை மரமே!

மிளகு கொடியின் படர் மரமே!

காப்புப் பயிர்களில் நிழல் மரமே!

பெண்களுக்காக இயற்கை தந்த வரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050.