சென்னை: சாதாரண ‘டிக்கெட்’ எடுத்தவர்களும் குறுகிய தூரம், ‘முன்பதிவு’ பெட்டியில் பயணிக்கலாம் என்ற புதிய நடைமுறையை ரயில்வே வாரியம் அறிவித்து உள்ளது.  இதுவரை முன்பதிவு செய்யப்படும் பெட்டியில், சாதாரண டிக்கெட் எடுத்தவர்கள் பயணிக்க முடியாத நிலையில், தற்போது, ரயில்வே புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்த டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்க சாதாரண டிக்கெட்டை விட கூடுதலாக 20 ரூபாய் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்லும், குறுகிய தூரப் பயணிகள், வழக்கமாக முன்பதிவு டிக்கெட் எடுக்க மாட்டார்கள். மாறாக சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்வார்கள். சிலர் முன்பதிவு பெட்டிகளிலும் பயணம் செய்வார்கள், இதனால், அங்கு இருக்கும் பயணிகளுக்கும், சாதாரண டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுவதுண்டு.

இந்த நிலையில்,  ற்கனவே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில், சாதாரண டிக்கெட்டில், பகல் நேரங்களில், குறுகிய துாரத்திற்கு, முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில், ‘டிரிசர்வ்டு’ எனும் வசதியை ரயில்வே செயல்படுத்தி வருகிறது. தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளாவுக்கு செல்லும் மொத்தம் 24 விரைவு ரயில்களில், ஓரிரு ‘டிரிசர்வ்டு’ பெட்டிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு ரயில்வே அறிவித்திருக்கும் இந்த திட்டத்தின் மூலம், கூடுதலான பயணிகள் பயணிக்க வசதி ஏற்படும். இதற்காக உருவாக்கப்பட்டிருப்பதுதான் டிரிசர்வ்டு பெட்டிகள்.  விரைவு ரயில்களில், ‘டிரிசர்வ்டு’ பெட்டிகள் வசதி, பல மாதங்களாக உள்ளது. இந்த வசதி மூலம், அதிகபட்சம், 100 கி.மீ., துாரம் வரையில் பயணிக்கலாம். சாதாரண கட்டணத்துடன், 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். வாய்ப்புள்ள மேலும், சில ரயில்களில் இந்த வசதியை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி குறிப்பிட்ட பெட்டிகளில் சாதாரண டிக்கெட் எடுத்த குறுகிய தூர பயணிகள் பயணிக்கலாம்.

பகல் நேரத்தில், மிகக் குறுகிய தொலைவுக்குப் பயணிக்கும் ரயில் பயணிகள் இந்த டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்க முடியும். தற்போதைக்கு, தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 24 விரைவு ரயில்களில் குறைந்தது 1 அல்லது 2 டிரிசர்வ்டு பெட்டிகளை தெற்கு ரயில்வே இணைத்துள்ளது. இந்த டிரிசர்வ்டு பெட்டிகள் இணைக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் ஆகின்றன. இவற்றை, பகல் நேரத்தில் நாள்தோறும் ரயிலில் பயணிக்கும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். விரைவில் மற்ற ரயில்களுக்கும் இந்த டிரிசர்வ்டு பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன. அதேவேளையில், சாதாரண டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில்,  சென்னை எழும்பூர் – கேரள மாநிலம், கொல்லம் அனந்தபுரி ரயில்களில், எஸ்.11, 12, பெட்டிகளில் திருநெல்வேலி – கொல்லம் வரை, இரு மார்க்கத்திலும் பயணிக்கலாம்.

எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே, ராமேஸ்வரம் விரைவு ரயிலில், எஸ்.12, 13 பெட்டிகளில், மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை இரு மார்க்கத்திலும் பயணிக்கலாம்.

கர்நாடகா மாநிலம், மங்களூரு – எழும்பூர் இடையே இயக்கப்படும் மங்களூரு விரைவு ரயிலில், திருச்சி முதல் மங்களூரு வரை, எஸ்.7, எஸ். 8, எஸ். 9, எஸ். 10 பெட்டிகளிலும்; மங்களூரு – எழும்பூர் இடையே இயக்கும்போது, எஸ்.10 பெட்டியில் மட்டும் பயணிக்க முடியும்

துாத்துக்குடி – கர்நாடகா மாநிலம், மைசூர் இடையே இயக்கப்படும் ரயிலில், துாத்துக்குடி முதல் மதுரை வரை, எஸ்.4, எஸ்.10, எஸ்.11, எஸ்.13 பெட்டிகளில் பயணிக்கலாம்.

கன்னியாகுமரி – கர்நாடகா மாநிலம், பெங்களூரு இடையே இயக்கப்படும் ரயில், கன்னியாகுமரி முதல் எர்ணாகுளம் வரை, எஸ்.6, 7 பெட்டிகளில் பயணிக்கலாம்.

சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் நாகர்கோவில் ரயிலில், எஸ்.11, எஸ்.12 பெட்டிகளில் திருநெல்வேலி முதல் நாகர்கோவில் வரையில், சாதாரண டிக்கெட்டில் பயணிக்கலாம்.

இந்த டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்க சாதாரண டிக்கெட்டை விட கூடுதலாக 20 ரூபாய் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.