பாட்னா,

பீகாரில் இறந்த மகளை எடுத்துச்செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், மகளை தோளில் சுமநது சென்ற சோகம் நடைபெற்றுள்ளது.

சமீப காலமாக வட மாநிலங்களில் நோயால் இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு  எடுத்துச்செல்ல அரசு மருத்துவமனைகள் ஆம்புலன்சு தர மறுப்பது அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் அரசு எய்ம்ஸ் மருத்துவமனையிலும் இந்த சோகம் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தன்று உடல்நலமில்லாத தனது 9 வயது மகளை, அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். ஆனால், அந்த சிறுமிக்கு உடனே மருத்துவமனை  நிர்வாகம்  சிகிச்சை அளிக்காமல் வெகுநேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக ஏற்கனவே அதிக ஜுரத்துடன் இருந்த அந்த சிறுமி, காத்திருந்த இடத்திலேயே மரணத்தை தழுவி உள்ளார். இதையறிந்த மருத்துவர்கள் உடனடியாக அந்த சிறுமியை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அந்த சிறுமி உயிரிழந்தது தெரிய வந்ததும், உடனே எடுத்துச்செல்ல சிறுமியின் பெற்றோரை அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.‘

‘லகிஷராய்’ என்ற சிறிய கிராமத்தில் வசித்து வருபவர் ரவுசன் குமாரி (வயது 7). இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும், காய்ச்சல் குணமாகாததால், பாட்னாவில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெற்றோரால் கூட்டி வரப்பட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு உடடினயாக மருத்துவம் அளிக்காமல், ஓபி வரிசையில் வரும்படி அதிக நேரம் காக்க வைக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை கூறியதாவது,

எனது குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் குணமாகாததால், இந்த மருத்துவமனைக்கு கூட்டி வந்தோம். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் உடனே சிகிச்சை அளிக்க மறுத்துவிடடனர். மேலும், பல விண்ணப்பங்களை கொடுத்து நிரப்பிவிட்டு வரிசையில் வாருங்கள் என்று கூறி விட்டனர். இதற்கு அதிக நேரம் செலவிடப்பட்டதால், அதற்குள்  தனது மகள்  ரவுசன் குமாரி மரணம் அடைந்து உள்ளார். இதை மருத்துவர்களும் உறுதி செய்தனர்.

இதனால் செய்வதறியாது, நான் எனது மகளின் உடலை வீட்டுக்கு எடுத்துச்செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டேன். ஆனால்,  அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. உடனே வெளியேறும்படி தன்னை கட்டாயப்படுத்தினர்.

இதனால் இறந்த தனது மகளின் உடலை தோளிலேயே வீடு வரை சுமந்து  சென்றதாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையே இதுபோன்ற செயலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.