கமல் – நிலவேம்பு குடிநீர் – தங்கர்பச்சான்

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்நோய்க்குத் தீர்வாக நிலவேம்பு குடிநீர் முன்வைக்கப்படுகிறது. அரசு இதை பரிந்துரைப்பதோடு மக்களுக்கு இலவசமாக அளித்தும் வருகிறது. அதோடு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தனி நபர்கள் பலரும் நிலவேம்புக்குடிநீரை மக்களுக்கு அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நிலவேம்புக்குடிநீர் அருந்துவதால் ஆண்மைக்குறைவு உட்பட பல பாதிப்புகள் ஏற்படும் என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  “நிலவேம்புக்குடிநீர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன்,  “சரியான ஆராய்ச்சி முடிவு கிடைக்கும்வரை நிலவேம்புக் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட வேண்டாம்” என்று தனது ரசிகர்களை வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “ ஆராய்ச்சியை அலோபதி மருத்துவர்கள்தான்  செய்யவேண்டும் என்றில்லை. பாரம்பர்யத்தைக் காப்பவர்கள் எனச் சொல்பவர்களும் செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பர்யம்தான்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் தெரிவித்துள்ளார்.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சித்த மருத்துவர்கள் உட்பட பல தரப்பினர் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தரமான தமிழ்த்திரைப்படங்களை இயக்கி  வருபவரும், சமூக ஆர்வலருமான இயக்குநர் தங்கர்பச்சானை பத்திரிகை டாட் காம் இதழுக்காக தொடர்புகொண்டு, கமல் கருத்து குறித்து கேட்டோம்.

“நிலவேம்புக்குடி நீரால் டெங்கு காய்ச்சல் குணமாகிறது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அந்த நிலவேம்புக்குடி நீர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். “அதுவரை பயன்படுத்த வேண்டாம்” என்கிறார் கமல். அப்படியானால் நிலவேம்பு குறித்து மட்டும்தான் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறதா?

இங்கு எல்லாமே கலப்படம் ஆகிவிட்டது. குடிக்கும் தண்ணீர் முதல், சுவாசிக்கும் காற்றுவரை கலப்படமாகிவிட்டது. எல்லாவற்றையும்தான் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

ஏன்.. நாம் சாப்பிடும் உணவே நஞ்சாகிவிட்டது. அதை ஆய்வுக்கு உட்படுத்தி முடிவு தெரிந்தபிறகு சாப்பிடலாம் என்று இருக்க முடியுமா?”  என்று கேள்வியுடன் முடித்தார் தங்கர்பச்சான்.