மும்பை

காங்கிரசால் தான் இன்னும் இந்தியாவில் ஜனநாயகம் வாழ்கிறது என பிரபல நடிகர் நானா படேகர் புகழாரம் சூட்டி உள்ளார்.

பாலிவுட்டின் மூத்த மற்றும் பிரபல நடிகர்களில் ஒருவர் நானா படேகர்.  மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆன நானா படேகர்  தனது கருத்துக்களை ஒளிக்காமல் சொல்பவர்களில் ஒருவர் ஆவார்.   சமீபத்தில் பாஜகவின் 38 ஆம் ஆண்டு கட்சி தொடக்க விழாவில் காங்கிரஸ் நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என பலர் கூறினார்கள்.   அது குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் நானா படேகர் பேசி உள்ளார்.

நானா படேகர், “காங்கிரஸ் இத்தனை நாட்களாக நாட்டுக்கு என்ன செய்தது என பாஜகவினர் கேட்பது மிகவும் தவறானது.    தற்போது ஆள்பவர்கள் எதுவும் பேசுவார்கள்.   ஆனால் உண்மை நிலையை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.  இத்தனை நாட்கள் ஜனநாயகம் இந்தியாவில் வாழ்ந்து வருவது யாரால்?  இவ்வளவு நாட்கள் ஆட்சி செய்த காங்கிரசால் தான் இன்னும் ஜனநாயகம் வாழ்ந்து வருகிறது.   இது ஒரு சாதனை இல்லையா?

தற்போது ஆளும் பாஜக  அரசு பத்ம விருதுகளில் மகாராஷ்டினரை புறக்கணித்து வருகிறது.   பல மூத்த திரையுலக மற்றும் பிற துறைப் பிரபலங்களுக்கு விருது அளிப்பதில்லை.   ஒரு காலத்தில் இந்தியாவையே ஆளும் பதவி மகாராஷ்டிரத்தை சேர்ந்த சரத் பவாரை தேடி வந்தது.   அவர் அதை ஒப்புக் கொள்ளாததால் அந்த பிரதமர் பதவி தேவே கௌடாவுக்கு சென்றது” என குறிப்பிட்டுள்ளார்.