டில்லி

மோடி பட்டம் பெற்றது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆர்வலர் ஒருவர் விசாரித்ததை மலிவான விளம்பரம் தேடும் செயல் என டில்லி பல்கலைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி டில்லி பல்கலைக் கழகத்தில் கடந்த 1978ஆம் வருடம் பி ஏ பட்டம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  அதே நேரத்தில் அவர் பட்டம் பெற்றதாக கூறப்படுவது தவறான செய்தி என சிலர் தெரிவிக்கின்றனர்.  எனவே இது குறித்து சமூக ஆர்வலர்களான அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, மற்றும் அம்ரிதா ஜோக்ரி ஆகியோர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையில் டில்லி பல்கலைக் கழகம் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் ஆகியவை குறித்த தகவல்கள் அனைத்தும் தேர்வு எழுதியவர்களின் தனிப்பட்ட விவரங்கள் என்பதால் அதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என மறுத்தது.   மேலும் இவ்வாறு ஒருவரது தனிப்பட்ட விவரங்களைக் கேட்பது மலிவான விளம்பரத்தை தேடிக்கொள்ளும் செயல் என பல்கலைக் கழ்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கு மனு அளித்தவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், “தேர்வு எழுதுவது மட்டுமே தனிப்பட்ட விவகாரம்.   தேர்வு முடிவுகள் தனிப்பட்ட விவகாரங்கள் அல்ல.   பல்கலைக் கழக இணைய தளங்களில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.  அந்த விவரங்களில் தேர்வு எழுதியவர்களின் பெயர், தந்தையார் பெயர், பிறந்த வருடம், மதிப்பெண் உள்ளீட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படுகின்றன.

அத்துடன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் அனைவர் முன்னிலையிலும் பகிரங்கமாக நடைபெறுகின்றன.   அந்த சமயத்தில் முதல் மதிப்பெண் பெற்றோரின் மதிப்பெண்கள் உட்பட பல விவரங்கள் கூறப்படுகின்றன.   எனவே இந்த தேர்வு விவரங்களை வெளியிடுவது தனிப்பட்ட உரிமையை மீறிய செயல் அல்ல” என பதில் அளித்துள்ளார்.