டில்லி

டந்த 2002 ஆம் ஆண்டு ரூ.250 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவரை டில்லி உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.

டில்லி மாநகராட்சியில் மாட்டுக் கொட்டகை பொறுப்பாளராக பணியாற்றியவர் ஆர் கே கவுபா. இவர் பொறுப்பில் உள்ள மாட்டுக் கொட்டகையில் கடந்த 2002 ஆம் வருடம் ஜீத்ராம் என்பவரின் மாடு அடைக்கப்பட்டது. தெருவில் திரிந்துக் கொண்டிருந்ததால் அடைக்கப்பட்ட இம்மாட்டை விடுதலை செய்ய கவுபா ரூ.250 லஞ்சம் கேட்டதாக ஜீத் ராம் புகார் அளித்தார்.

அதனால் சிபிஐ கவுபாவை பிடிப்பதற்காக இரு நூறு ரூபாய் நோட்டுக்களையும் ஒரு ஐம்து ரூபாய் நோட்டுக்களையும் ரசாயனம் தடவி அளித்தனர். அதை வாங்கிய போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார். ஆனால் அவர் அது மாநகராட்சி விதித்த அபராதம் என தெரிவித்தும் அவர் கூறிய சமாதானம் ஏற்கப்படவில்லை.

அதை ஒட்டி கைது செய்யப்பட்ட கவுபாவுக்கு டில்லி நீதிமன்றம் ஒரு வருட சிறைத் தண்டனை மற்றும் ரூ.250 அபராதம் விதித்தது. அதை எதிர்த்து கவுபா டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் நேற்று தனது தீர்ப்பை வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பில், “சிபிஐ சார்பில் சாட்சியம் அளித்த இருவரும் குற்றம் சாட்டப்பட்டவர் லஞ்சம் கேட்டதற்கானதையோ மற்றும் எவ்வளவு கேட்டார் என்பதையோ ஆதாரத்துடன் தெரிவிக்கவில்லை. மாட்டை தெருவில் விடுவது போல் அடைத்து வைப்பதும் குற்றமாகும். ஆனால் இந்த வழக்கில் மாட்டை பிடித்து அடைத்து வைத்தவரை சிபிஐ விசாரிக்கவில்லை.

அத்துடன் கவுபா பிடிபட்ட போது அவர் மாநகராட்சிக்கான அபராத வசூலில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் இருந்து பிடிபட்டதாக கூறப்படும் நோட்டுக்களான ரூ.2978 க்கு அவரிடம் கணக்கு இருந்தது. ஆனால் சிபிஐ தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டுக்கள் அந்த ரூ.2978 ஐ சேர்ந்தவை அல்ல என சரிவர நிரூபிக்கப்படவில்லை. ஆகவே கவுபாவை இந்த நீதிமன்றம் குற்றத்தில் இருந்து விடுவிக்கிறது.” என கூறப்பட்டுள்ள்து.