டில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி:

ம்ஆத்மி அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த டில்லி தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் ஏற்கனவே சோதனை நடைபெற்ற நிலையில, வரும் வெள்ளிக்கிழமை கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும் என மாநில போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். டில்லியில் மாநில கவர்னருக்கும், ஆம்ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19ந்தேதி  கெஜ்ரிவால் வீட்டில்  அரசாங்கத்தின் விளம்பர செலவு அதிகரித்து வருவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதில் கலந்துகொண்ட தலைமை செயலாளருக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாசை கெஜ்ரிவால் முன்னிலையில் பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான்  ஆகிய எம்எல்ஏக்கள்  தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்து சென்ற தலைமை செயலாளர். நேராக கவர்னர் மாளிகை சென்றார். அங்கு கவர்னர் அனில் பைஜாலிடம் புகார் கொடுத்துள்ளார். அதையடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வருகின்ற வெள்ளிக்கிழமை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.